fbpx
Healthஉணவு

மஞ்சளின் மருத்துவ குணங்கள்!!

Benefits of Turmeric - In Your Kitchen

சமையலறையில் பயன்படுத்தப்படும் உணவு சார்ந்த பொருட்களின் மருத்துவ குணங்கள் பற்றி அத்தியாயம், அத்தியாயமாக எழுதலாம். ஆனால், பயப்படாதீர்கள், நான் ஒவ்வொரு அத்தியாயம் மட்டுமே எழுதப் போகிறேன். மஞ்சளின் மருத்துவ குணங்கள் காரணமாக அதை சமையறை பொருட்களின் ராணி என்று கூறலாம். அப்படியென்றால் ராஜா எது என்று கேட்காதீர்கள். சமையலறையில் ராஜாக்களுக்கு (ஆண்களுக்கு என்று படிக்கவும்) சமைக்கவும், மாவாட்டவும், பாத்திரம் தேய்க்கவும் மட்டுமே இடம் உண்டு. Work from home என்றால் என்ன என்று தெரிகிறதா? சரி, நாம் விஷயத்துக்கு வருவோம். மஞ்சளின் மகிமை என்று எதோ 1980-களில் வந்த படங்கள் ரேஞ்சில் பேசவில்லை. பல்வேறு ஆய்வுகள் மூலம் மஞ்சளின் மருத்துவ பலன்கள் நிரூபணமாகியுள்ளது. இப்போது நாம் மஞ்சளின் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

மஞ்சளின் நன்மைகள்

மஞ்சளின் குணங்களை அறிந்த நம் முன்னோர் அதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு வழிகளில் பயன்படுத்தி வந்துள்ளனர். மஞ்சள், உணவு பொருளாக, இயற்கை மருத்துவமாக, மேனி எழிலை மேம்படுத்தும் பொருளாக என பல பரிமாணங்களை கொண்டது. மஞ்சளின் பலன்களை பார்ப்போம்.

மஞ்சளின் மருத்துவ குணங்கள்

  • சளி, இருமலை போக்குகிறது
  • சீரணத்தை பலப்படுத்துகிறது
  • உடல் எடை குறைய உதவுகிறது. (அதற்காக இதற்கு முன்பு கூறப்பட்டுள்ள தொப்பையைக் கரைக்க எளிய யோகாசன பயிற்சிகளை விட்டுவிடாதீர்கள்)
  • நோய் எதிர்ப்பு திறனை வளர்க்கிறது
  • வலி நிவாரணியாக செயல்படுகிறது
  • இதய நலனை பாதுகாக்கிறது
  • மூளையின் திறனை பாதுகாக்கிறது; மூளை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது
  • Alzheimer’s நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளைத்திறனை பாதுகாக்க உதவுகிறது
  • மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளையும், அசவுகரியங்களையும் போக்க உதவுகிறது
  • புற்று நோய் உருவாவதை தடுக்க உதவுகிறது
  • மூட்டு வலியை போக்க உதவுகிறது
  • மன அழுத்தத்தை போக்க உதவுகிறது

மஞ்சளை எப்படி பயன்படுத்துவது

மஞ்சளின் நன்மைகளை பெற ஒரு டம்ளர் பால் அல்லது தண்ணீரை அடுப்பில் ஏற்றி, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளையும் சிறிது மிளகுத் தூளையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க தொடங்கியதும், தீயை சிறிதாக்கி மேலும் சுமார் 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து, பின் மிதமான சூட்டில் பருகவும்.

மஞ்சள் தூளை சமையலில் தொடர்ந்து பயன்படுத்தி வருவது நல்லது.

மேனி எழிலுக்கு மஞ்சள்

நம் முன்னோர்கள் வீட்டில் எளிய முறையில் உடல் நலத்தை பேணி வந்ததோடு மேனி எழிலையும் பராமரித்து வந்தனர். சமையலறையில், வீட்டு தோட்டத்தில் இலகுவாகக் கிடைக்கக் கூடிய பொருட்களை வைத்து மிக இயற்கையான முறையில் உடலழகை பராமரித்தனர். அவர்கள் பயன்படுத்திய அழகு பொருட்களில் முக்கியமான ஒன்று, மஞ்சள். மஞ்சளின் நன்மைகள், உடல் ஆரோக்கியம் சார்ந்தது மட்டுமில்லை. உடல் அழகைக் கூட்டவும் மஞ்சள் கீழ்க்கண்டவாறு உதவுகிறது:

  • சரும நிறத்தை மேம்படுத்தி சருமத்தை மிளிர வைக்கிறது
  • சுருக்கங்களை போக்குகிறது
  • கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்களை போக்குகிறது
  • உடலில் தேவையற்ற முடிகளை போக்க உதவுகிறது
  • காயங்களை ஆற்றுகிறது
  • தோல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்கிறது
  • சூரிய கதிர்களால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க உதவுகிறது
  • இளமையான தோற்றத்தை தருகிறது
பயன்படுத்தும் முறை

குளிக்கும் போது மஞ்சள் பொடியை தேய்த்துக் கொள்ளலாம்.

சிறிது மஞ்சள், சிறிது பசும்பால், சிறிது தேன் ஆகிய மூன்றையும் நன்றாகக் கலந்து முகத்தில் பூசி, சுமார் 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ முகம் பொலிவுறும். சூரிய வெப்பத்தினால் ஏற்படும் கருமையை போக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.

மஞ்சளுடன் சிறிது தயிரும் எலுமிச்சை சாறும் சேர்த்தும் பூசி காய விட்டு பின் குளிக்கலாம்.

மஞ்சளை எடுத்து பூசுகிறோம் என்று சாம்பார் பொடியை எடுத்தீர்களானால், உங்களுக்கு இன்னொரு கொரோனா லாக்டவுன் தேவை என்று அறிக.

Tags

Related Articles

Back to top button
Close
Close