fbpx
HealthOthers

8 வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள்!

Best Health Benefits of 8 Walking

நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இன்று, 8 வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம். நடைப்பயிற்சி சரி, அது என்ன 8 வடிவ நடைப்பயிற்சி என்கிறீர்களா?

இந்த கொரோனா காலக்கட்டத்தில் பலரது வீட்டு மொட்டை மாடிகளும் ரொம்பவே சுறுசுறுப்பாகி விட்டது. சாலைகளில் நடைப்பயிற்சி செய்வது தடைப்பட்டு விட்டதால், மொட்டை மாடியை பயன்படுத்தும் ஏற்கனவே நடைப்பயிற்சி செய்பவர்களும், வீட்டிலேயே உட்கார்ந்து அலுவலக வேலை செய்வதால், சற்று கைகாலை அசைக்கலாம் என்று நடைப்பயிற்சி செய்ய புதிதாக வருபவர்களும், எல்லாரும் மாடிக்கு போறாங்களே என்று தானும் மாடிக்கு சென்று நடப்பவர்களுமாக இன்று மொட்டை மாடிகள் அதிரடியான ஆக்கிரமிப்புக்கு ஆளாகியிருக்கின்றன.

பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருப்பவர்களுடன் மெல்லிய சிரிப்போடு அறிமுகமாகி பின் கொஞ்சம் கொஞ்சமாக பேசக் கற்றுக் கொள்ளும் குழந்தையை போல், மெல்ல மெல்ல பேசத் தொடங்கி பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதை பல மாடிகளிலும் காண முடிகிறது. என்ன, கொஞ்சம் ஆர்வக் கோளாறு கேஸ்கள், என்ன சார், சமீபத்துலதான் குடி வந்துருக்கீங்களோ என்று கேட்க, உங்க பக்கத்து வீட்டுலதான் அஞ்சு வருஷமா இருக்கேன் என்ற பதில்களும் (ஏறக்குறைய இந்த ரேஞ்சில்) காதில் விழத்தான் செய்கிறது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று நம் முன்னோர்கள் சொன்னது மறந்து தான், தன் குடும்பம் என்று வாழ்பவர்களை, விலகி இருங்கள் என்று அறிவுறுத்திய கொரோனா மொட்டை மாடியில் ஒன்று சேர்த்திருக்கிறது.

சரி, நாம் 8 வடிவ நடைப்பயிற்சிக்கு வருவோம்.

8 வடிவ நடைப்பயிற்சி என்றால் என்ன?

தலைப்பிலேயே பதிலும் இருக்கிறது. தரையில் ஒரு பெரிய 8-ஐ வரைந்து அதன் மேல் நடப்பதுதான் 8 வடிவ நடைப்பயிற்சி; அதாவது 8 வடிவில் நடப்பதுதான் 8 வடிவ நடைப்பயிற்சி.

சித்தர்கள் இந்த உலகிற்கு அருளிச் சென்ற எண்ணிலடங்கா நன்மைகளுள் ஒன்று இந்த 8 வடிவ நடைப்பயிற்சி. இதையே இப்போது வெளிநாடுகளில் Infinity Walking என்ற பெயரில் பிரபலமாக நடைமுறையில் இருக்கிறது.

8 வடிவ நடைப்பயிற்சி விதிகள்

8 வடிவில் நடக்க வேண்டும், அவ்வளவுதானே என்று மனதிலேயே 8-ஐ தரையில் வரைந்து நடக்கும்போது, சில நேரங்களில் மிக நீண்டும், சில நேரங்களில் மிக அகலமாகவும், சமயத்தில் குறுகலாகவும், ஆக 8 அஷ்டகோணலாகவும் வாய்ப்பு உள்ளது என்பதால் 8-ஐ வரைந்து அல்லது அதன் நுணுக்கங்களை பின்பற்றி அடையாளம் வைத்து கொண்டு பயிற்சி செய்வது நல்லது.

Infinity Walking எனப்படும் 8 வடிவ நடைப்பயிற்சியின் விதிகள் இதோ:

  • 8 வடக்கு–தெற்கு திசையில் இருக்க வேண்டும்; அதாவது, அதன் நீளம் வடக்கு-தெற்காக இருக்க வேண்டும்.
  • அகலம் 6 முதல் 8 அடியாகவும், நீளம் 12 முதல் 16 அடியாகவும் இருக்க வேண்டும்.
  • வீட்டு மொட்டை மாடி அல்லது தோட்டத்தில் 8 வடிவ நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு இந்த அளவில் 8 போட வாய்ப்பு அதிகம். வீட்டினுள் செய்யக் கூடியவர்களுக்கு இந்த அளவில் 8 போட முடியாவிட்டாலும், அளவை அதற்கேற்ப குறைத்து 8 நடைப்பயிற்சி செய்யலாம்.
  • தெற்கு பக்கத்தில் இருந்து வடக்கு நோக்கி நடக்க தொடங்க வேண்டும். மீண்டும் ஆரம்ப இடத்துக்கு வரும்போதுதான் ஒரு சுற்று முடிவடையும்.
  • 15 நிமிடங்களுக்கு தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும் அடுத்த15 நிமிடங்களுக்கு வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் நடக்க வேண்டும்.
  • மிக வேகமாக நடக்க கூடாது, ரொம்ப மெதுவாகவும் நடக்க கூடாது. சீரான வேகத்தில் தொய்வில்லாமல் நடக்க வேண்டும்.
  • காலை, மாலைகளில் வெறும் வயிற்றில் நடக்கவும். 5 மணியிலிருந்து 6 மணிக்குள் நடப்பது மிகவும் சிறப்பு.
  • வெறும் கால்களில் நடக்க வேண்டும்.

பலன்கள்

8 வடிவ நடைப்பயிற்சி செய்யும்போது பூமியின் காந்தப்புலத்தை நோக்கியும் அதற்கு எதிராகவும் நடப்பதால் உடலின் ஆரோக்கியத்தை அற்புதமாக பாதுகாக்கிறது. 8 வடிவ நடைப்பயிற்சியின் பலன்கள் என்னவென்று பார்ப்போம்.

  • உடலின் ஆற்றலை அதிகப்படுத்துகிறது
  • உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டை முன்னேற்றுகிறது
  • சளி, மூக்கடைப்பு ஆகியவற்றை போக்குகிறது
  • ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சு கோளாறுகளை சரி செய்கிறது
  • நுரையீரலை பலப்படுத்துகிறது
  • அதிக இரத்த அழுத்தத்தை சரி செய்கிறது
  • இருதய நலத்தை பாதுகாக்கிறது
  • மலச்சிக்கலை போக்குகிறது
  • சீரண மண்டலத்தை பலப்படுத்துகிறது
  • ஒற்றை தலைவலியை போக்குகிறது
  • அதிக உடல் எடையை குறைக்கிறது
  • கழுத்து, தோள், முதுகு, இடுப்பு, முட்டி, பாதம், குதிகால் போன்ற அனைத்து பகுதிகளில் உள்ள வலியை போக்குகிறது
  • மூளைத்திறனை அதிகரிக்கிறது
  • இளமையான தோற்றத்தை தருகிறது
  • தைராய்டு குறைப்பாடுகளை சரி செய்கிறது
  • வெறும் கால்களில் நடக்கும்போது, பாதத்தில் உள்ள வர்மப் புள்ளிகள் தூண்டப்பெற்று உடல் இயக்கத்தை செம்மைப்படுத்துகிறது; நாள்பட்ட நோய்களை குணப்படுத்த உதவுகிறது
  • சிறுநீரக கோளாறுகளை சரி செய்கிறது
  • சீறுநீரகம் மற்றும் பித்தப்பையில் உள்ள கற்களை போக்குகிறது
  • இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது
  • மூட்டு தொடர்பான பிரச்சினைகளை சரி செய்கிறது
  • தூக்கமின்மையை சரி செய்கிறது
  • பார்வையை கூர்மையாக்குகிறது
  • கேட்கும் திறனை அதிகரிக்கிறது
  • பாத வெடிப்பை போக்குகிறது
  • மன அழுத்தத்தை போக்கி மனதை அமைதிப்படுத்துகிறது

குறிப்பு

கர்ப்பிணி பெண்களும் சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் 8 வடிவ நடைப்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

பேசிக் கொண்டோ, பாட்டை கேட்டுக் கொண்டோ செய்வதை தவிர்க்க வேண்டும். 8 வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள் அனைத்தையும் முழுமையாக பெற கவனத்தை பயிற்சியில் குவிக்க வேண்டும்.

Tags

Related Articles

Back to top button
Close
Close