fbpx
HealthRE

தொப்பையை கரைக்க(Belly Fat) எளிய யோகாசன பயிற்சிகள் – பகுதி 1

Simple Yoga Exercises to Reduce belly fat - Part 1

கணினி, பயன்பாட்டுக்கு வந்த பிறகு பல தொழில் துறைகளிலும் நம்ப முடியாத அசுர வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் முக்கிய நிகழ்வும் பக்கத்து வீட்டு பாட்டி வத்தல் போட்ட செய்தியை விடவும் வேகமாக நம் காதுக்கு எட்டி விடுகிறது. அறிவை விரிவாக்கவும், விரல் அசைவில் பொருட்கள், உடைகள் வாங்கவும், கட்டணங்கள் செலுத்தவும், ஏன், இந்த கொரோனா காலகட்டத்தில் வீட்டில் இருந்தப்படியே அலுவலக வேலை செய்யவும் என கணினி வீட்டின் இன்றியமையாத அங்கமாகிவிட்டது.

ஆனால், உடலுழைப்பு குறைந்திருக்கிற அதே நேரத்தில், உடல் எடை பெருத்தவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு கூடியிருப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. இதற்கான காரணங்களில் சில:

  • தவறான உணவு பழக்கம்
  • உடற்பயிற்சி இல்லாமை
  • மன அழுத்தம்
  • ஹார்மோன் கோளாறுகள்

யோகா எப்படி உடல் எடையை சீராக வைக்க உதவும்?

யோகப்பயிற்சி உடல் உறுப்புகளை சீராக இயங்க வைக்கிறது. அதன் விளைவாக உடலில் சத்துகள் சரியான அளவில் கிரகிக்கப்பட்டு கழிவுகள் வெளியேற்றப்படுகிறது.

கரைய மாட்டேன் என்று விடாப்பிடியாக இருக்கும் கொழுப்பை, ஆசனங்கள் செய்வதன் மூலம் கரைக்க முடியும். கொழுப்பை கரைப்பதுடன் அதிக கொழுப்பு மீண்டும் சேராமல் இருக்கவும் ஆசனங்கள் உதவுகிறது.

தொடர்ந்து யோகா செய்வதால், மனம் போன போக்கில் சாப்பிடும் பழக்கம் நீங்கி, சமச்சீரான உணவை சரியான அளவில், சரியான நேரத்தில் உண்ணும் பழக்கம் உருவாகும்.

யோகப்பயிற்சி செய்வதால் மனம் அமைதியடையும். அதனால், மன அழுத்தம் காரணமாக உடல் எடை கூடுவதையும் தவிர்க்க முடியும்.

தொப்பையை(Reduce Belly fat) கரைக்க 3 சிறந்த யோகாசனங்கள்

1) உத்தானாசனம்

இது தொப்பையை கரைக்கும் அற்புதமான பயிற்சி.

செய்முறை

  • நேராக நிற்கவும்.
  • மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, கைகளை மேல் நோக்கி உயர்த்தவும்.
  • மூச்சை மெதுவாக வெளியேற்றிக் கொண்டே, முன்னால் குனியவும்.
  • குனியும் போது, கைகளை கீழ் நோக்கி கொண்டு வந்து பாதங்களின் வெளிப்புறம் தரையில் வைக்கவும். தரையில் வைக்க முடியா விட்டால், கைக்கு எட்டுமிடத்தில் கால்களை பிடித்து கொண்டு குனியவும்.
  • 15 வினாடிகள் வரை இந்த நிலையில் இருக்கவும்.
  • மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே நிமிர்ந்து ஆரம்ப நிலையில் நிற்கவும்.

குறிப்பு

இருதய கோளாறு, முதுகெலும்பு பிரச்சினைகள், குடலிறக்கம் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.

2) திரிகோணாசனம்

இந்த ஆசனம் பக்கவாட்டு சதையை கரைக்க உதவும்.

செய்முறை

  • நேராக நிற்கவும். கால்களுக்கு இடையில் சுமார் இரண்டு அடி இடைவெளி விட்டு நிற்கவும்.
  • வலது பாதத்தை பக்கவாட்டில் திருப்பவும்.
  • கைகளை பக்கவாட்டில் தோள்களுக்கு சமமாக உயர்த்தவும்.
  • மெதுவாக மூச்சை வெளியில் விட்டுக்கொண்டு வலது பக்கம் சாய்ந்து, வலது கையை வலது பாதத்தின் அருகில் வெளிப்புறமாக தரையில் வைக்கவும். அல்லது, முடிந்த அளவு பக்கவாட்டில் சாய்ந்து வலது காலை வலது கையால் பிடித்துக் கொள்ளலாம்.
  • இடது கையை மேல் நோக்கி உயர்த்தவும்.
  • தலையை மேற்புறமாக திருப்பி, இடது கைவிரல் நுனியை பார்க்கவும்.
  • 30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், நிமிர்ந்து, இடது புறமாக இதை திரும்ப செய்யவும்.

குறிப்பு

வயிற்று போக்கு, தலைவலி ஏற்படுகிற நேரங்களில் இந்த ஆசனத்தை தவிர்க்கவும். குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நலம்.

3) பவனமுக்தாசனம்

இது வயிற்று கொழுப்பை குறைக்க உதவும் அற்புத ஆசனம். வயிற்றில் உள்ள வாயுவை சீராக்குவதன் மூலமும் சீரண கோளாறுகளை சரிசெய்வதன் மூலமும் இது வயிற்று உறுப்புகளை பாதுகாக்கிறது.

 

செய்முறை

  • தரையில் கால்களை நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை பக்கவாட்டில் வைக்கவும்.
  • மெதுவாக மூச்சை வெளியேற்றிக் கொண்டே, கால்களை உயர்த்தி, கால் முட்டி முகம் நோக்கி வரும் வகையில் கால்களை மடிக்கவும். கைகளால் கால்களை அணைத்து பிடிக்கவும். இப்போது, தொடைப்பகுதி, வயிற்றின் மேல் அழுந்தியிருக்கும்.
  • தலையை உயர்த்தி, நெற்றி அல்லது முகவாய் முட்டியுடன் சேரும்வண்ணம் வைக்கவும். கழுத்து வலி உள்ளவர்கள் தலையை உயர்த்த வேண்டாம்.
  • 15 நொடிகள் இந்த நிலையில் இருக்கவும்.
  • மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மெதுவாக கால்களை முன்போல் நீட்டி படுக்கவும். கைகளை தரையில் வைக்கவும்.

குறிப்பு

அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள், தீவிர கழுத்து பிரச்சினை உள்ளவர்கள் தலையை தரையில் வைத்து ஆசனத்தை செய்யவும்.

இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வரும்போது, தொப்பை நன்றாக குறையும். இதனுடன் சேர்த்து செய்யக் கூடிய ஆசனங்களை இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.

Tags

Related Articles

Back to top button
Close
Close