fbpx
HealthOthers

ஒற்றை தலைவலிக்கு யோகா – பகுதி 1

Yoga For Migraine Headaches - Part 1

தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. “நேத்து ஒரே தலைவலி, சூடா ஒரு கப் காபி குடிச்சிட்டு கண்ணை மூடித் தூங்கிட்டேன். ஒரு மணி நேரத்துல தலைவலி போயிடுச்சு” என்று சொல்பவர்களை பார்த்து ஒற்றை தலைவலிக்காரர்கள் பொறாமைப்பட்டால் அது தப்பே கிடையாது. இதைக் கேட்கும்போதே அவர்களுக்கு தலைவலி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. போதாத குறைக்கு, இவர்கள் ஒற்றை தலைவலி பாதிப்பில் இருக்கும்போது, “இதுக்கு ஏன் சோர்ந்து போய் படுக்கற. போய் ஆவி பிடிச்சா சட்டுனு தலைவலி ஓடிப்போயிடும்” போன்ற அறிவுரைகள் வேறு வாட்டி எடுக்கும். இந்த ஒற்றை தலைவலி அதற்கெல்லாம் அடங்காது என்ற எண்ணம் ஒரு புறமும், எனக்கு இருக்கறது மைக்ரேன் தலைவலியாக்கும் என்ற கர்வமுமாக தலைவலி எகிறினாலும் எகிறும். வலி நீக்கி மாத்திரைகளுக்கு பெப்பே காட்டும் ஒற்றை தலைவலி, வாழ்நாள் தண்டனை என்றே கருதப்படுவதுண்டு. ஆனால், உண்மை அது அல்ல. ஒற்றை தலைவலிக்கு யோகா அற்புதமான நிவாரணத்தைத் தருகிறது. சரியான வாழ்க்கை முறையும், யோகப் பயிற்சியும் உங்கள் ஒற்றை தலைவலியை போக்கும் அற்புத நிவாரணம். ஒற்றை தலைவலி வருவதற்கான காரணங்கள் என்ன, தூண்டல்கள் எவை என்பதையும் ஒற்றை தலைவலிக்கான ஆசனங்கள் என்ன என்பதையும் இப்போது பார்ப்போம்.

ஒற்றை தலைவலிக்கு காரணங்களும் தூண்டல்களும்

ஒற்றை தலைவலிக்கு காரணங்கள் இவை மட்டும்தான் என்று வரையறுத்து சொல்ல முடியாது. ஒற்றை தலைவலி அனைவருக்கும் ஒரே மாதிரியான காரணத்தாலோ, ஒரே மாதிரியான தூண்டலாலோ ஏற்படும் என்று வரையறுக்க முடியாது. ஒற்றை தலைவலி ஏன் வருகிறது என்பதற்கான காரணங்களில் பொதுவாக அறியப்பட்டவை என்ன என்று பார்ப்போம்.

ஒற்றை தலைவலிக்கான காரணங்கள் சில
  • குடும்ப வரலாறு. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது ஒற்றை தலைவலி இருந்தால் உங்களுக்கும் அது ஏற்படும் வாய்ப்பு அதிகம்
  • மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்
  • மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்
  • ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மை
ஒற்றை தலைவலிக்கான தூண்டல்கள்

ஒற்றை தலைவலிக்கான தூண்டல்கள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கலாம். பொதுவாக இருக்கக் கூடிய தூண்டல்கள் இவை:

  • தூக்கம் பற்றாக்குறை
  • கழுத்து வலி
  • தோள் வலி
  • மன அழுத்தம்
  • மனச் சோர்வு
  • பதட்டம்
  • அதிர்ச்சி
  • கோபம்
  • அதிக சப்தம்
  • சில வகையான அதீத வாசனைகள்
  • சில வகை உணவுகள்
  • நேரம் தப்பி சாப்பிடுதல்
  • அசீரணக் கோளாறுகள்
  • காற்றோட்டம் இல்லாதிருத்தல்

ஒற்றை தலைவலிக்கு யோகாசனங்கள்

குறிப்பிட்ட யோகாசனங்கள் ஒற்றை தலைவலிக்கான தூண்டல்களை தவிர்ப்பதுடன் காரணத்தயும் நேர் செய்கிறது. ஒற்றை தலைவலிக்கான யோகாசனங்கள் இதோ:

1) பத்மாசனம்

தியான ஆசனங்களில் சிறந்ததான பத்மாசனம், மனதை அமைதிப்படுத்துகிறது, உணர்வுகளை சம நிலையில் வைக்கவும் மன அழுத்தத்தை போக்கவும் உதவி, ஒற்றை தலைவலி ஏற்படாமல் தவிர்க்கிறது.

செய்முறை
  • விரிப்பில் கால்களை நீட்டி அமர்ந்து கொள்ளவும்.
  • வலது காலை மடித்து, வலது பாதத்தை இடது தொடையின் மேல் வைக்கவும்.
  • இடது காலை மடித்து இடது பாதத்தை வலது தொடையின் மேல் வைக்கவும். குதிகால்கள் இரண்டும் இடுப்பை ஒட்டி இருக்க வேண்டும்.
  • முதுகை நிமிர்த்தவும்.
  • கைகளில் சின்முத்திரை செய்யவும். அதாவது, கட்டை விரல் நுனியயும், சுட்டும் விரல் நுனியையும் ஒன்று சேர்த்து மற்ற விரல்களை பிரித்து, முட்டியின் மேல் வைக்கவும்.
  • கண்களை மூடி ஒரு நிமிடம் அமரவும். பயிற்சி நேரத்தை மெதுவாக அதிகரித்து சில மாதங்களில் அரை மணி நேரம் வரை செய்யவும்.
குறிப்பு

கால்களை தொடையின் மேல் வைக்க முடியாதவர்கள் ஒரு காலை தொடையின் மேல் வைத்தும் மறு காலை தொடையின் கீழ் வைத்தும் பயிற்சி செய்யலாம். அல்லது இரண்டு கால்களையும் சாதாரண முறையில் சம்மணமிடுவது போல் மடித்து உட்காரலாம்.

முட்டி மற்றும் கணுக்காலில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

2) பாலாசனம்

மன அழுத்தத்தை போக்கி மனதை அமைதிப்படுத்தும் அற்புத ஆசனம். நரம்புகளை அமைதிப்படுத்தவும் தலைவலியை போக்கவும் உதவுகிறது. ஒற்றை தலைவலிக்கான ஆசனங்கள் செய்யும் போது இதை தவறாமல் செய்து வரவும்.

செய்முறை
  • விரிப்பில் முட்டி போட்டு அமர்ந்து கொள்ளவும்.
  • உங்கள் கால் பெருவிரல்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்க, குதிகால்கள் விலகி, ஆங்கில எழுத்து ‘V’ போல இருக்க வேண்டும். உங்கள் புட்டத்தை அந்த இடைவெளியில் வைத்து அமர வேண்டும்.
  • வலது கை மணிக்கட்டை இடது கைவிரல்களால் பிடித்து கொள்ளவும். அல்லது இரண்டு கரங்களையும் பின்னால் அல்லது முன்னால் நீட்டியவாறு தரையில் வைக்கவும்.
  • மூச்சை வெளியே விட்டுக் கொண்டே மெதுவாக முன்னால் குனிந்து நெற்றியை முட்டிக்கு முன்னால் தரையில் வைக்க வேண்டும். புட்டத்தை உயர்த்தக் கூடாது.
  • மூச்சை சீராக விடவும்.
  • 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும்.
குறிப்பு

நெற்றியை முன்னால் வைக்க முடியாதவர்கள்,  முடிந்த வரை முன்னால் குனியலாம் அல்லது சற்று உயரமான மனையை தரையில் வைத்து அதன் மேல் நெற்றியை வைக்கலாம்.

முட்டியில் பிரச்சினை உள்ளவர்களும் கர்ப்பிணி பெண்களும் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.

3) சேதுபந்தாசனம்

தொப்பையைக் கரைக்கும் எளிய யோகாசன பயிற்சிகளில் இந்த ஆசனத்தை பார்த்திருக்கிறோம். சேதுபந்தாசனம் மனதை அமைதிப்படுத்துகிறது. தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அசீரண கோளாறை சரி செய்வதன் மூலம் அசீரணத்தால் ஏற்படும் ஒற்றை தலைவலியை போக்குகிறது. மாதவிடாய் கோளாறுகளை போக்கி அதனால் ஏற்படும் தலைவலியை தவிர்க்கிறது.

செய்முறை
  • விரிப்பில் கால்களை நீட்டி நேராக படுக்கவும்.
  • கால்களை மடக்கி பாதங்களை முட்டியின் கீழ் தரையில் வைக்கவும். கைகள் உடம்பின் பக்கவாட்டில் தரையில் இருக்க வேண்டும்.
  • கைகளை நன்றாக தரையில் அழுத்தி, முதுகை தரையிலிருந்து முடிந்தவரை மேலே தூக்கவும்.
  • உயர்த்திய நிலையில் 20 வினாடிகள் இருக்கவும்.
  • பின் மெதுவாக உடலை தாழ்த்தி கால்களை நீட்டி படுக்கவும்.
குறிப்பு

கழுத்து, தோள், முதுகு ஆகிய பகுதிகளில் தீவிர வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

இனி வரும் பகுதிகளில் ஒற்றை தலைவலி போக்கும் ஆசனங்களில் மேலும் சிலவற்றை பார்ப்போம். அது வரை, இங்கு கூறப்பட்டுள்ள மூன்று ஆசனங்களை செய்து வாருங்கள். ஒற்றை தலைவலிக்கு யோகா செய்வதோடு வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அது குறித்தும் இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.

Tags

Related Articles

Back to top button
Close
Close