fbpx
HealthTamil Newsயோகா

ஒற்றை தலைவலிக்கு யோகா–பகுதி 2

Yoga For Migraine Headaches - Part 2

ஒற்றை தலைவலிக்கு யோகா – பகுதி 1 படித்து பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டீர்களா? இப்போது ஒற்றை தலைவலியை இயற்கையான முறையில் போக்க மேலும் சில ஆசனங்களை பார்ப்போம். முதல் பகுதியை படித்த ஒரு ஒற்றை தலைவலிக்காரர், “ஏங்க, அதில் தலைவலிக்கான தூண்டல்கள் என்பதில் மனைவி என்ற ஒன்றை குறிப்பிடவில்லையே” என்று கேட்டார். உண்மையை சொன்னால், இவர் கேட்டதற்கு முதல் நாள், இவர் மனைவி, தூண்டல்களில் கணவன் என்று ஏன் சேர்க்கவில்லை என்று சண்டைக்கே வந்து விட்டார்.  நல்ல வேளை, கணவரின் பெயரையே போட சொல்லி அவர் கேட்கவில்லை. தூண்டல்களில் இப்படி வேறு சில காரணங்களும் விடுபட்டு போயிருக்கும். தலைவலிக்கான தூண்டல்கள் என்று குறிப்பிடப்பட்டவை பொதுவானவை. அவரவர்களின் அனுபவமும் வாழ்க்கை முறையும் வேறு சில தூண்டல்களை உருவாக்கலாம். ஆனால், தூண்டல் எதுவாக இருந்தாலும் ஆசனம் செய்வதன் மூலமும் உங்கள் வாழ்க்கை முறையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வருவதன் மூலமும் ஒற்றை தலைவலியிலிருந்து விடுபடலாம்.

ஒற்றை தலைவலிக்கு யோகா

ஒற்றை தலைவலியை போக்கும் ஆசனங்கள் சிலவற்றை பார்ப்போம்.

4) பஸ்சிமோத்தானாசனம்

பஸ்சிமோத்தானாசனம் பற்றி ஏற்கனவே தொப்பையை கரைக்க எளிய யோகாசன பயிற்சிகள் – பகுதி 2-ல் படித்திருப்பீர்கள். பஸ்சிமோத்தானாசனம் அசீரணக் கோளாறுகளை சரி செய்வதால், அதனால் ஏற்படும் ஒற்றை தலைவலியை போக்குகிறது. மேலும் கவலை, மனச்சோர்வு, தோள், கழுத்து, மேல் முதுகு இறுக்கம் ஆகியவற்றை சரி செய்கிறது. தூக்கமின்மையையும் பஸ்சிமோத்தானாசனம் சரி செய்கிறது. ஒற்றை தலைவலிக்கு யோகா பகுதியில் இடம் பெற இதை விட வேறு என்ன தகுதி தேவை?

செய்முறை

  • விரிப்பில் நேராக அமர்ந்து கால்களை முன்னால் நீட்டிக் கொள்ளவும்.
  • மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, கைகளை பக்கவாட்டில் உயர்த்தி பின் தலைக்கு மேல் நேராக உயர்த்தவும்.
  • மெதுவாக மூச்சை வெளியிட்டவாறு, கைகளை நீட்டியவாறு முன்னால் குனியவும்.
  • கைகளால் கால் பெருவிரல்களை அல்லது பாதத்தை பற்றவும். உங்கள் முதுகு தொடை மேலும் உங்கள் நெற்றி கால் முட்டி அல்லது அதற்கும் கீழாக இருக்க வேண்டும். அவ்வாறு காலை பிடிக்க முடியவில்லையென்றால், கை எட்டும் இடத்தில் பற்றியவாறு முடிந்தவரை முன்னால் குனியவும்.
  • 20 நொடிகள் இந்த நிலையில் இருக்கவும். பின் மெதுவாக நிமிர்ந்து ஆரம்ப நிலைக்கு வரவும்.

குறிப்பு

சையாடிக் பிரச்சினை உள்ளவர்கள், தீவிர முதுகு பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

5) அதோமுக ச்வானாசனம்

ஒற்றை தலைவலிக்கு யோகா செய்யும் போது அவசியம் செய்ய வேண்டியது அதோமுக ச்வானாசனம். இது மனதை அமைதிப்படுத்துகிறது. சீரணத்தை செம்மைப்படுத்துகிறது. இந்த ஆசனம் பிராண வாயு நிறைந்த இரத்தத்தை தலைக்கு அனுப்புவதன் மூலம் தலைவலியை போக்க உதவுகிறது.

செய்முறை

  • விரிப்பில் தவழ்வது போன்ற நிலைக்கு செல்லவும். உங்கள் மணிக்கட்டு உங்கள் தோள்களுக்கு நேர் கீழாகவும் உங்கள் கால் முட்டி உங்கள் இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்க வேண்டும்.
  • மூச்சை வெளியே விட்டவாறே உங்கள் இடுப்பை உயர்த்தவும். அவ்வாறு உயர்த்தும் போது உங்கள் கால் முட்டியை நேராக்கவும். உங்கள் பாதம் தரையில் பதிந்து இருக்க வேண்டும். உங்கள் கைகளும் வளைவில்லாமல் நேராக இருக்க வேண்டும்.
  • உங்கள் தலை உங்கள் கைகளுக்கு இடையில் உச்சந்தலை கீழ் நோக்கியும் உங்கள் பார்வை உங்கள் தொப்புளிலும் இருக்க வேண்டும். இப்போது உங்களை பார்க்கும்போது ஆங்கில எழுத்து ‘V’-யை திருப்பி போட்டது போல் இருக்கும்.
  • முதலில் 20 வினாடிகளில் தொடங்கி, மெல்ல நேரத்தை அதிகரித்து ஒரு நிமிடம் வரை இந்த ஆசனத்தில் இருக்கவும்.

குறிப்பு

தலைவலியை போக்கும் ஆசனமான இதை தலைவலி இருக்கும்போது செய்யக் கூடாது. மணிக்கட்டு, தோள் ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

6) உத்தானாசனம்

தொப்பையை கரைக்க எளிய யோகாசன பயிற்சிகள் – பகுதி 1-ல் உத்தானாசனம் பற்றி படித்திருப்பீர்கள். உத்தானாசனம் மூளையை அமைதிப்படுத்தி மனம் சார்ந்த பிரச்சினைகளால் ஏற்படும் தலைவலியை போக்குகிறது. கழுத்தில் ஏற்படும் இறுக்கத்தை சரி செய்வதன் மூலம் அதனால் ஏற்படும் ஒற்றை தலைவலியை போக்க உதவுகிறது. தலைக்கு பிராண வாயு நிரம்பிய இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் தலைவலியை போக்க உதவுகிறது.

செய்முறை

  • நேராக நிற்கவும்.
  • மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, கைகளை மேல் நோக்கி உயர்த்தவும்.
  • மூச்சை மெதுவாக வெளியேற்றிக் கொண்டே, முன்னால் குனியவும்.
  • குனியும் போது, கைகளை கீழ் நோக்கி கொண்டு வந்து பாதங்களின் வெளிப்புறம் தரையில் வைக்கவும். தரையில் வைக்க முடியா விட்டால், கைக்கு எட்டுமிடத்தில் கால்களை பிடித்து கொண்டு குனியவும்.
  • 15 வினாடிகள் வரை இந்த நிலையில் இருக்கவும்.
  • மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே நிமிர்ந்து ஆரம்ப நிலையில் நிற்கவும்.

குறிப்பு

தலைவலிக்கு சிறந்த ஆசனமான இதை தலைவலி இருக்கும்போது செய்யக் கூடாது. இருதய கோளாறு, முதுகெலும்பு பிரச்சினைகள், குடலிறக்கம் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.

மேற்கூறப்பட்ட மூன்று ஆசனங்களையும் சேர்த்து இது வரை ஒற்றை தலைவலிக்கு யோகா ஆறை நாம் பார்த்திருக்கிறோம். வருகிற நாட்களில் மேலும் சில ஆசனங்களை பார்ப்போம். அதுவரையில் இந்த ஆசனங்களை பயிலுங்கள். வாழ்க்கை முறையில் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்துங்கள்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close