fbpx
HealthRE

தொப்பையை கரைக்க (Belly Fat) எளிய யோகாசன பயிற்சிகள் – பகுதி 2

Simple Yoga Poses to Reduce Tummy Fat - Part 2

தொப்பையை கரைக்க எளிய யோகாசன பயிற்சிகள் – பகுதி 1-ல் கூறப்பட்டுள்ள மூன்று ஆசனங்களையும் செய்து பார்த்தவர்களெல்லாம் கையை மேலே தூக்குங்கள். யோகா செய்யாதது எனக்கு தெரியவா போகிறது என்று என்னை ஏமாற்ற நினைத்து கையை தூக்க வேண்டாம்.

“தொப்பையை கரைக்க(Belly Fat) எளிய யோகாசன பயிற்சிகள் – பகுதி 1” பார்க்காதவர்கள் இந்த லிங்கை க்ளிக் செய்து பார்க்கவும் – Click Here

ஏனென்றால், நீங்கள் கையை தூக்கினாலும், எனக்கு தெரியப் போவதில்லை. சிரிச்சிட்டீங்களா? சரி, முதல் மூன்று ஆசனங்களை பயிலத் தொடங்கிவிட்டீர்கள் என்றால், இதோ அடுத்த மூன்று ஆசனங்கள்.

முன் குறிப்பு: இவற்றை ஒரு வாரம் செய்த பின், குறைந்து விட்டதா என்று வயிற்றை தொட்டு பார்ப்பது, ஒண்ணாம் கிளாசில் முதல் நாள் சேர்ந்ததும், ஒண்ணாவது பாஸாயிட்டோமான்னு பாக்கறதுக்கு சமம். எப்படி உடல் எடை கூடுவதும், வயிறு பெருப்பதும் திடீர் நிகழ்வு இல்லையோ, அது போல, வயிற்றை குறைப்பதும் திடீரென்று சாத்தியப்படாது. தொடர் பயிற்சியும் வாழ்க்கை முறை மாற்றங்களுமே நல்ல விளைவை கொடுக்கும்.

முக்கிய குறிப்பு: நாம்தான் ஆசனம் செய்கிறோமே என்று நொறுக்குத்தீனியை தின்று தீர்ப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

4) நவாசனம்

வயிற்றில் உள்ள அதிகக் கொழுப்பை கரைக்கும் அற்புத ஆசனம்.

செய்முறை

  • விரிப்பில் அமர்ந்து கால்களை முன்னால் நீட்டி கொள்ளவும்.
  • மெதுவாக மூச்சை வெளியே விட்டுக் கொண்டே கால்களை தரையிலிருந்து மேலே தூக்கவும். அதே நேரத்தில், உங்கள் மேல் உடம்பையும் சற்றே பின்னால் சாய்க்கவும். இப்போது நீங்கள் உங்கள் புட்ட எலும்பில் அமர்ந்திருப்பீர்கள்.
  • கைகளை தூக்கி கால்களை நோக்கி முன்னால் நீட்டவும். கைகள் தோள்களுக்கு நேராக இருக்க வேண்டும்.
  • 15 முதல் 20 நொடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும்.
  • மெதுவாகக் கால்களை கீழே இறக்கி தரையில் வைத்து உடம்பை நேராக வைத்து உட்காரவும்.

குறிப்பு

இடுப்பு எலும்பு மற்றும் முதுகெலும்பு பிரச்சினை, அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த பயிற்சியை தவிர்க்கவும். மாதவிடாய் காலத்தில் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.

5) தனுராசனம்

நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் இந்த ஆசனம், வயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகக் கொழுப்பை கரைக்க பெரிதும் உதவுகிறது.

செய்முறை

  • விரிப்பில் கால்களை நீட்டி குப்புற படுக்கவும்.
  • கால்களை மடக்கி பாதங்களை தலையை நோக்கி கொண்டு வரவும்.
  • கைகளை உயர்த்தி இரு கணுக்கால்களையும் பிடிக்கவும்.
  • கால்களை பற்றி உயர தூக்கி தொடைகளை தரையிலிருந்து உயர்த்தவும். அதே நேரத்தில் தலையையும் மார்பையும் தூக்கவும். இப்போது உங்கள் உடல் அம்பு போன்ற வடிவில் இருக்கும்.
  • 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், கால்களையும் மார்பையும் தளர்த்தி ஆரம்ப நிலையை அடையவும்.

குறிப்பு

தீவிரமான முதுகு மற்றும் வயிறு பிரச்சினைகள் இருப்பவர்கள், குறைந்த அல்லது அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கடுமையான கழுத்து பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.

6) பஸ்சிமோத்தானாசனம்

வயிற்று கொழுப்பை கரைக்கும் அருமையான ஆசனங்களில் பஸ்சிமோத்தானாசனமும் ஒன்று. இது வயிற்று பகுதியை சுறுசுறுப்பாகவும், வயிற்று உள் உறுப்புகளை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

செய்முறை

  • விரிப்பில் நேராக அமர்ந்து கால்களை முன்னால் நீட்டிக் கொள்ளவும்.
  • மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, கைகளை பக்கவாட்டில் உயர்த்தி பின் தலைக்கு மேல் நேராக உயர்த்தவும்.
  • மெதுவாக மூச்சை வெளியிட்டவாறு, கைகளை நீட்டியவாறு முன்னால் குனியவும்.
  • கைகளால் கால் பெருவிரல்களை அல்லது பாதத்தை பற்றவும். உங்கள் முதுகு தொடை மேலும் உங்கள் நெற்றி கால் முட்டி அல்லது அதற்கும் கீழாக இருக்க வேண்டும். அவ்வாறு காலை பிடிக்க முடியவில்லையென்றால், கை எட்டும் இடத்தில் பற்றியவாறு முடிந்தவரை முன்னால் குனியவும்.
  • 20 நொடிகள் இந்த நிலையில் இருக்கவும். பின் மெதுவாக நிமிர்ந்து ஆரம்ப நிலைக்கு வரவும்.

குறிப்பு

சையாடிக் பிரச்சினை உள்ளவர்கள், தீவிர முதுகு பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

மேற்கூறப்பட்ட ஆசனங்களை தொடர்ந்து செய்து வர நல்ல முன்னேற்றத்தை காணலாம். சிலருக்கு இந்த ஆசனங்களை பழகுவது கடினமாக இருக்கலாம். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், விடாமுயற்சியோடு பழகி வர விரைவில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

Tags

Related Articles

Back to top button
Close
Close