fbpx
HealthRE

நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

Benefits of Walking

நடைப்பயிற்சி செய்ய சொன்னால், நான்தான் வீட்டுலயே நூறு வாட்டி அங்கயும் இங்கயுமாய் நடக்கறேனே என்றும், நான் தினமும் வீட்டுக்கும் கடைக்கும் நடையாய் நடக்கிறேனே என்றும் கூறுபவர்களுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்.

நடைப்பயிற்சி என்பது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்ட காலம் இது. பல வருடங்களுக்கு முன்னால் கடற்கரையிலோ அல்லது வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவிலோ வயதானவர்கள் சிலர் மட்டுமே மெதுவாக நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்ததால், நடைப்பயிற்சி = வயதானவர்கள் என்பதாகத் தோற்றம் ஏற்பட்டது. சில வீடுகளில், “ஏங்க, retire தான் ஆயிட்டீங்களே, கொஞ்சம், வாக்கிங், கீக்கிங் அப்படி எதாவது போய், வரும்போது கொஞ்சம் காய்கறி வாங்கி வரலாம்ல?” என்கிற அளவுக்கு   நடைப்பயிற்சி வயதானவர்களுக்கு மற்றும் ஆண்களுக்கு என்பதாக இருந்தது. மனைவிக்கு, தான் நடைப்பயிற்சி போவது முக்கியமா அல்லது காய்கறி வாங்கி வருவது முக்கியமா என்கிற குழப்பத்தோடே அந்த கணவர் பையை கக்கத்தில் வைத்துக் கொண்டு கிளம்புவார். அபூர்வமாக சில கட்டிளங்காளைகளும் வேகமான நடைப்பயிற்சி செய்வதுண்டு.

சில வருடங்கள் சென்ற பின், மத்திய வயதை அடைந்தவர்களும் நடைப்பயிற்சி சோதியில் ஐக்கியமாகினர். வேகுவேகென்று கையை நன்றாக வீசி வீசி நடப்பது மட்டுமே பலன் அளிக்கும் என்று நம்பி கையை தோள் உயரத்துக்கு தூக்கி, வேகமாக இறக்கி, முடிந்தவரை கையை பின்னால் வீசும் சிலரின் சுற்று வட்ட பாதையை கவனமாக தவிர்த்தவர்கள் பலர்.

இன்றைய காட்சியே வேறு; இது வரவேற்கத்தக்கதாகவும் இருக்கிறது. இப்போழுது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் பாகுபாடில்லாமல் அனைவரும் நடைப்பயிற்சி செய்கின்றனர்.  நடைப்பயிற்சி செய்வதற்கென்றே பிரத்தியேக உடை, காலணிகள் மற்றும் mobile phone-ல் இதற்கு தேவையான app, ஆகியவற்றோடு களமிறங்கி விடுகின்றனர். நடைப்பயிற்சி செய்ய நீங்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டியதில்லை, உங்கள் வீட்டுக்கு அருகில் பூங்கா இருக்கிறதா என்று தேட வேண்டியதுமில்லை. தேவையானதெல்லாம் நல்ல சாலைகள் மட்டுமே.

நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

நடைப்பயிற்சி தரும் பலன்கள் பல. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

  • நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது
  • வேகமான நடைப்பயிற்சி அதிக அளவில் calorie-க்களை எரித்து அதிக உடல் எடையை குறைக்கிறது
  • தொப்பையைக் கரைக்க உதவுகிறது
  • இருதயத்தை பலப்படுத்தி, இருதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது
  • அதிக இரத்த அழுத்தத்தை சரி செய்கிறது
  • நுரையீரலை பலப்படுத்துகிறது
  • சர்க்கரை அளவை சீராக வைக்கிறது
  • சீரண மண்டலத்தை செம்மையாக்குகிறது
  • மூட்டு வலியை போக்குகிறது
  • எலும்புகளை உறுதியாக்குகிறது
  • தசைகளை பலப்படுத்துகிறது
  • கால்களை பலப்படுத்துகிறது
  • உடலுக்கும் மனதுக்கும் சுறுசுறுப்பை தருகிறது
  • வாரத்திற்கு 7 மணி நேரத்துக்கு மேல் நடக்கும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படாமல் தவிர்க்கப்படுவதாக ஆய்வு கூறுகிறது
  • ஆயுளை நீட்டிக்கிறது
  • நினைவாற்றலை வளர்க்கிறது
  • மன அழுத்தத்தை போக்குகிறது

வாகன போக்குவரத்து பெரிய அளவில் இல்லாத விடிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது சிறந்தது.

முக்கிய குறிப்பு: விடிகாலை  நேரத்தில் நடைப்பயிற்சி செய்வதில் ஆண்களுக்கு கூடுதலான நன்மை, காய்கறி கடைகள் திறந்திருக்காது என்பது. உங்களுக்கு புரியவில்லையென்றால், பையோடு நடைப்பயிற்சிக்கு ஒரு மணி நேரம் கழித்து வரும் ராகவனையோ, மாசிலாமணியையோ கேளுங்கள்.

Tags

Related Articles

Back to top button
Close
Close