fbpx
Others

மோடியின் அசல் உத்தரவாதம்வெறுப்பும் பாகுபாடும்தான்–ஸ்டாலின் கண்டனம்.

 “பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு இழிவானது. மிகவும் வருத்தத்துக்கு உரியது. தனது தோல்விகளுக்கு எதிரான மக்களின் கோபத்துக்கு அஞ்சி, மத உணர்ச்சிகளைத் தூண்டி, வெறுப்புப் பேச்சின் மூலம் தாம் எதிர்கொண்டுள்ள தோல்வியைத் தவிர்க்கப் பார்க்கிறார் மோடி. வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் அசலான உத்தரவாதங்கள்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு இழிவானதும், மிகவும் வருத்தத்துக்குரியதும் ஆகும். தனது தோல்விகளுக்கு எதிரான மக்களின் கோபத்துக்கு அஞ்சி, மத உணர்ச்சிகளைத் தூண்டி, வெறுப்புப் பேச்சின் மூலம் தாம் எதிர்கொண்டுள்ள தோல்வியைத் தவிர்க்கப் பார்க்கிறார் மோடி. வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் அசலான உத்தரவாதங்கள். அவரது இத்தகைய அப்பட்டமான வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சைக் காதில் வாங்காதது போல் இருக்கும் தேர்தல் ஆணையம் நடுநிலைமை என்பதன் சுவடே இன்றி அப்பண்பையே கைவிட்டுள்ளது.இண்டியா கூட்டணி வாக்குறுதியளித்துள்ள சமூக – பொருளாதார மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது சமத்துவச் சமுதாயத்தை உருவாக்குவதற்கான வழிமுறையாக நெடுநாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்ததாகும். அதற்குத் தவறான பொருள் கற்பித்து, பின்தங்கிய வகுப்பினருக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் ஆகியவற்றில் உரிய பங்கு கிடைக்கவிடாமல் செய்கிறார் பிரதமர் மோடி. இண்டியா கூட்டணியின் தலைவர்கள் பாஜகவின் வஞ்சகமான திசைதிருப்பும் தந்திரங்களைப் பற்றி கவனமாக இருக்கவேண்டும். மோடியின் மோசமான தோல்விகளை அம்பலப்படுத்தும் நமது முயற்சிகளை மேலும் உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் பதிவிட்டுள்ளார்.இதனிடையே, ‘மோடியின் வெறுப்புப் பேச்சு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மோடியின் ராஜஸ்தான் பேச்சு, தேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மன்மோகன் பேசியதும், மோடி சொன்னதும்… – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “முதல் கட்ட தேர்தலே, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாஜகவுக்கு பலத்த அடி கிடைக்கும் என்பதை சூசகமாக உணர்த்தியுள்ளது. தோல்வி மிகத் தீவிரமாக பாஜகவைத் துரத்த ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக அடுத்த தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் பாஜகவின் ஒற்றைப் பிரச்சாரகரான பிரதமர் நரேந்திர மோடி பதற்றத்தின் உச்சத்திலும், ஆத்திரத்திலும் வார்த்தைகளை அள்ளிக் கொட்டி வருகிறார்.  ராஜஸ்தான் மாநிலத்தில் பன்ஸ்வாடா எனும் இடத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய மோடி, “மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்த நாட்டின் சொத்துகளில் முதன்மை உரிமை முஸ்லிம்களுக்குத்தான் உள்ளது என்று கூறினார். இதன் பொருள் என்ன? அவர்கள் (காங்கிரஸ்) யாருக்கு சொத்துகளை பிரித்துக் கொடுப்பார்கள்? யார் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்களோ, யார் இந்த நாட்டின் மீது படையெடுத்து ஆக்கிரமித்தார்களோ அவர்களுக்கு சொத்துகளை பிரித்துக் கொடுப்பார்கள்; நீங்கள் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தையெல்லாம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தருவதை ஏற்றுக் கொள்கிறீர்களா? வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா?” என்று மிகவும் ஆவேசத்துடன் பேசியிருக்கிறார்.அதுமட்டுமல்ல, “இந்த நகர்ப்புற நக்சல்கள், நமது தாய்மார்களின், சகோதரிகளின் தாலிக் கொடிகளில் உள்ள தங்கத்தைக் கூட விட்டு வைக்கமாட்டார்கள்” என்றும் அவற்றையும் பறித்து முஸ்லிம்களுக்கு தந்துவிடுவார்கள்” என்ற பொருளிலும் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். இது எத்தனை அக்கிரமமான, அராஜகமான பேச்சு. ஒரு நாட்டின் பிரதமரே தனது தேர்தல் பிரச்சாரத்தில் நேரடியாக இஸ்லாமிய மக்கள் மீது வன்மத்தையும் விஷத்தையும் கக்குகிறார். முற்றிலும் உண்மையல்லாத விசயத்தை மக்கள் முன்னால் திரித்துக் கூறுகிறார். இது அப்பட்டமான மூன்றாந்தரப் பேச்சு. முற்றிலும் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.அவரது உரை வெளியான உடனே சமூக ஊடகங்களில் திட்டமிட்டு ஆர்எஸ்எஸ் – பாஜக சமூக ஊடக கூலிப் படைகளால் தீவிரமாகப் பரப்பப்படுகிறது. நாடு முழுவதும் இந்து எனும் உணர்வு கொண்டோரிடையே திட்டமிட்டு இஸ்லாமிய வெறுப்பு பரப்பப்படுகிறது. இது தேர்தலில் இந்து மக்களின் வாக்குகளை அணிதிரட்டப் பயன்படும் என்று மோடியும் பாரதிய ஜனதா கட்சியும் கணக்கு போடுகிறார்கள். ஆனால், உண்மையில் மன்மோகன் சிங் அப்படிப் பேசினாரா என்பதை உடனடியாக, உண்மை கண்டறியும் ஊடகக் குழுக்கள் ஆய்வு செய்து, மோடியின் உரை முற்றிலும் பொய் என்பதை அம்பலப்படுத்திவிட்டன.பிரதமர் மோடி குறிப்பிடுவது, 2006-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் ஆற்றிய உரையே ஆகும். அந்த உரையில் மோடி குறிப்பிடுகிற, உண்மையில் மன்மோகன் சிங் பேசியப் பகுதி இதுதான்: “நமது கூட்டு முன்னுரிமைகள் மிகத் தெளிவாக உள்ளன என்று நான் நம்புகிறேன். விவசாயம், நீர்வளங்கள், கல்வி, கிராமப்புற முதலீடுகள், பொது உள்கட்டமைப்பு முதலீடுகள் ஆகியவற்றுடன் தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளின் நலன்களே நமது முன்னுரிமை.”மேலும் அவர், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் குறித்துப் பேசுகையில், “வளர்ச்சியின் பலன்கள் சிறுபான்மை மக்களுக்கும் சேரும் வகையில் பொருத்தமான முறையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்” என்று குறிப்பிடுகிறார். அந்த உரையின் தொடர்ச்சியாக, “அவர்கள் நமது வளங்களில் முன்னுரிமை பெறுகின்றனர்” என்று மன்மோகன் சிங் முடிக்கிறார். இங்கு “அவர்கள்” என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டது, மேலே குறிப்பிட்ட அனைத்து தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரையும் சேர்த்துத்தான் என்பது மிகத் தெளிவாக பதிவாகியிருக்கிறது.ஆனால், நரேந்திர மோடி தனது ராஜஸ்தான் உரையில், மன்மோகன் சிங் அன்றைக்கு பேசியது முஸ்லிம் மக்களுக்காக மட்டுமே என்று திரித்துக் கூறுகிறார். 2006-ம் ஆண்டிலேயே இதே குறிப்பிட்ட பேச்சு தொடர்பாக பாஜகவும் மோடியும் இதேபோன்று அவதூறு கிளப்பினார்கள்; அந்த சமயமே மன்மோகன் சிங் சார்பாக பிரதமர் அலுவலகம் அதற்கான விளக்கத்தையும் தெளிவாக தந்துவிட்டது. ஆனால், 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே பிரச்சினையை முற்றிலும் இல்லாத ஒன்றை மன்மோகன் சிங் குறிப்பிடாத ஒன்றை எழுப்பி, நாட்டு மக்களை திசை திருப்பவும் தேர்தல் ஆதாயத்துக்காக மதப்பிளவை உருவாக்கவும் நரேந்திர மோடி பயன்படுத்துகிறார்.‘பிரதமர்’ என்பது நாட்டின் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து, அரவணைத்துச் செல்ல வேண்டிய உயரிய பதவி. ஆனால், அந்தப் பதவிக்கு சற்றும் மரியாதை இல்லாத விதத்தில், மோடி மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. அவரை தேர்தல் தோல்வி பயம் எந்த அளவுக்கு துரத்துகிறது என்பதை இதன் மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close