தமிழகத்தில் கொரோனா பாதித்த பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்வு!

சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதித்த பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பலருக்கு சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் சென்னை பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகுந்த அச்சம் நிலவி வருகிறது.
உலகம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸால் 25 லட்சத்திற்கும் மேல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 18,601 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,520 பேர் பாதிக்கப்பட்டு 17 பேர் பலியாகிவிட்டனர்.
இதில் சென்னையில் மட்டும் 250 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் ராயபுரம், திருவல்லிக்கேணியில் பாதித்தவர்கள் அதிகம். நேற்று முன்தினம் சென்னையில் தொலைக்காட்சியில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது.
மற்றொரு நாளிதழில் பணியாற்றும் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதும் சோதனையில் தெரிய வந்தது.
இதனையடுத்து இருவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனமும் , நிருபர் ஒருவர் தங்கி இருந்த விடுதியையும் அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.
மேலும் இருவரும் தங்கி இருந்த இடம் மற்றும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என கண்டுபிடித்து சோதனை நடத்த கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்..
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேற்கண்ட தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றுவோர் 92 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மேலும் சென்னையில் உள்ள பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.















