fbpx
RETamil Newsஅரசியல்

எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும்: சென்னையில் ரஜினி ஆவேச பேட்டி!!!

சென்னை: எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ரஜினி மிகவும் ஆவேசமாக தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை இன்று  நேரில் சந்தித்து ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் உதவித் தொகையாக வழங்கினார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்த பிறகு ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்தபோது மிகவும் கவலையாக இருந்தது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் தற்போது அச்சத்தில் உள்ளனர்.

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஆலை ஊழியர்கள் குடியிருப்புகளையும் எரித்தது சாமானிய மக்கள் இல்லை.

சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வைத்திருந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. எனவே, சமூக விரோதிகளை ஒடுக்க, தமிழக அரசு ஜெயலலிதா வழியை பின்பற்ற வேண்டும்.

ஏதாவது பிரச்னை என்றால் நீதிமன்றங்களை அணுக வேண்டும். போராட்டங்கள் கூடாது. அப்படி போராட்டம் நடத்தினால், மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். போராட்டத்தில் சமூக விரோதிகளின் ஊடுருவலை கவனிக்க தவறியது உளவுத்துறையின் தோல்வி.

எல்லா பிரச்னைக்கும் ராஜினாமா என்றால் மறுபடியும் என்ன நடக்கும்? மக்களின் சக்திக்கு முன்னால் எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை எந்த அரசு வந்தாலும் திறக்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நீதிமன்றம் சென்றால், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் மனிதர்களே இல்லை.

துப்பாக்கிச் சூடு குறித்து அமைக்கப்பட்டிருக்கும் ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கை இல்லை.

இவ்வாறுஅவர் தூத்துக்குடியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ரஜினி ஆவேசமாக தெரிவித்தார்.

தூத்துக்குடி பயணம் முடிந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்பொழுது தூத்துக்குடி பிரச்னைக்கு சமூக விரோதிகள்தான் காரணம் என்ற அவரது கருத்துக்கு எதிர் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்துக் கூறியதாவது:

யார் எதிர் கருத்துகளைக் கூறியது? நான் மீண்டும் சொல்கிறேன். சமூக விரோதிகள்தான் இதற்கு காரணம். எப்படி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கடைசி நாளில் சமூக விரோதிகள் ஊடுருவி பிரச்னைகளை உண்டாக்கினார்களோ, அது போலவே இங்கும் நடந்துள்ளது.

காவல்துறையை சமூக விரோதிகள் தாக்கியதே அனைத்துக்கும் முழு காரணம். இந்த சமூக விரோதிகள்தான் காவல்துறையைத் தாக்கினர். கலெக்டர் அலுவலகத்தை தாக்கியதும் அவர்கள்தான். அங்குள்ள குடியிருப்புக்கு தீ வைத்ததும் அவர்கள்தான்.

சமூக விரோதிகள்தான் காரணம் என்று எனக்குத் தெரியும். எப்படித் தெரியும் என்று கேட்காதீர்கள்.

அந்த சமூக விரோதிகள் மீது கண்டிப்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களது புகைப்படங்களை வெளியிட்டு சமூகத்தில் வெளிப்படுத்த வேண்டும்.

காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்படுவதை நான் எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

எதற்கு எடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்று மக்கள் இறங்கினால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close