சிறப்பு ரயில்களில் பயணிப்பவர்களுக்கு புது கண்டிஷன் போட்ட ரயில்வே…!
IRCTC announces new regulations

டெல்லி:
தனிமைப்படுத்திக் கொள்ள மறுத்தால் சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் வெளி மாநிலங்களில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து வரும் விதமாக சிறப்பு ரயில் இயக்கப்படும் அறிவிப்புகள் வெளியாகின. அதனால் ஆயிரக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லியில் இருந்து கிளம்பிய ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் 797 பேருடன் சென்னைக்கு சில தினங்களுக்கு முன் வந்தது.
அதில் இருந்த பயணிகள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டனர். இதே போன்று பெங்களூர் வந்த 100க்கும் மேற்பட்ட பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ள சம்மதிக்க மறுத்தனர்.
அரசின் இந்த நடவடிக்கை பற்றி முன்கூட்டியே தகவல் சொல்லப்படவில்லை என்றும் பயணிகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, ரயில்வே நிர்வாகம் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது.
அதாவது தனிமைப்படுத்தலுக்கு சம்மதிப்பவர்களை மட்டுமே ரயில் பயணத்துக்கு அனுமதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிபந்தனையை ஒத்துக் கொண்டால் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.















