நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட்..
தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமானநிலம் இலவச வாகன நிறுத்துமிடமாக உள்ளது. 2026 ஜூலை, 6ல் தனி நபர்கள் இருவரது பெயரில் அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தின. இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் உறுதி அளித்து இருந்தார்.அந்த பத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி, பழநி கோவில் நிர்வாகம் சார்பில், பத்திரப்பதிவு துறைக்கு மனு அனுப்பப்பட்டது. மேலும், பழநி தண்டாயுதபாணி கோவில் சார்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. முதற்கட்டவிசாரணையில் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது உறுதியான நிலையில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், நிலம் கிரையம் பெற்ற வெள்ளைத்துரை, சேதுபதி ஆகிய நால்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனைத் தொடர்ந்து, பழநி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.