மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கட்டண சலுகை..! இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு!
Indigo flight announces concession for doctors, nurses

டெல்லி:
கொரோனாவுக்கு எதிராக போராடும் டாக்டர் மற்றும் நர்சுகளுக்கு, 25 சதவீத கட்டண சலுகையை அளிக்க, ‘இண்டிகோ’ விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கும் மிகப் பெரிய சேவையில், நாடு முழுதும் உள்ள டாக்டர்கள், நர்சுகள் ஈடுபட்டு வருகின்றனர். அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அவர்களில் பலர், தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் முன்கள வீரர்களாக செயல்படும் டாக்டர் மற்றும் நர்சுகளை கவுரவிக்கும் விதமாக, அவர்களுக்கு கட்டண சலுகையை, இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து, இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இண்டிகோவில் பயணம் செய்யும் டாக்டர் மற்றும் நர்சுகளுக்கு பயண கட்டணத்தில், 25 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இண்டிகோ நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, இந்த சலுகைக்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விமான நிலையத்தில், செக் இன் நடைமுறையின் போது, தாங்கள் பணியாற்றும் மருத்துவமனையின் அடையாள அட்டையை, அவர்கள் காண்பிக்க வேண்டும். இந்தாண்டு இறுதி வரை இந்த சலுகை திட்டம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
















