வீடுதேடி வரும் ஆவின் பால் – ஆர்டர் செய்து பெறலாம்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பரவி இருக்கும் நிலையில், இந்த தொற்றை கட்டுப்படுத்தும் ஒரு தடுப்பு முயற்சியாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதால் இதன் பாதிப்பு அதிகமாக உள்ள சில முக்கிய மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு வரும் 26ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கின் காரணமாக மக்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் வெளியில் வர அனுமதி தரப்பட்டுள்ளது. மற்ற காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு சமயத்தில் ஆர்டர் செய்தால் ஆவின் பால் மற்றும் அதை சார்ந்த பிற பொருட்கள் நுகர்வோர் வீடு தேடி வரும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; உணவு விநியோகம் செய்து வரும் சொமாட்டோ மற்றும் டன்ஸோ போன்ற நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே ஆவின் பால் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆவின் பால் , வெண்ணெய் மற்றும் நெய் உள்ளிட்ட உபபொருட்களையும் பொதுமக்கள் ஆர்டர் செய்து பெறலாம் , தற்போது ஆவின் முகவர்களுக்கான நியமன வைப்புத்தொகை ரூ.1000-ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.















