fbpx
RETamil News

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் எனும் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு !

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை தொடர்ந்து, ஆலையை ஆய்வு செய்வதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

இந்த பரிசீலனையை ஆய்வு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என இன்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆலையை திறப்பதற்கான வழிமுறைகளை 3  வாரங்களில் உருவாக்க வேண்டும். மேலும் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிப்பதற்கு குழு அமைக்க வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும், ஆலையை திறக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் அமைச்சர் வேலுமணி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close