தென்மேற்கு பருவ மழை அந்தமானில் நாளை துவக்கம்!!!
தென்மேற்கு பருவ மழை, அந்தமானில் நாளை துவங்குகிறது. இந்தியாவில், வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழையால், அணைகள், ஏரிகள், குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்கும்.
இதில், தென்மேற்கு பருவ மழை, நாட்டின் தென் பகுதியில் துவங்கி, காஷ்மீர் வரை கொட்டும்.இந்த பருவ மழை பொய்த்தால், நாட்டில் அதிக அளவுக்கு வறட்சி ஏற்படும்.
மூன்றாண்டுகளாக, பசிபிக் கடலில் நிலவிய, எல் நினோ. லா நினா பருவ சூழலின் தாக்கத்தால், பருவ மழை காலமும், மழையின் அளவும் குறைந்தது.
பல மாநிலங்களில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது, பசிபிக் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் , இந்திய பெருங்கடல் கடல்பகுதியிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில், தென்மேற்கு பருவ மழை, நாளை துவங்க உள்ளது.
அந்தமான் நிகோபார் தீவுகள் பகுதியில், பருவ மழைக்கு உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக, மே இறுதியில் தான் பருவ மழை துவங்கும். இந்த ஆண்டு, முன்கூட்டியே துவங்குகிறது.
அந்தமானில் நாளை துவங்கும் பருவ மழை, படிப்படியாக வலுப்பெற்று, வரும், 29ல், கேரளாவையும், பின், தமிழகத்தையும் எட்டும் என, வானிலை மையம் கணித்துள்ளது.இந்த ஆண்டு, 99 சதவீதம் அளவுக்கு, தென்மேற்கு பருவ மழை பொழிவு இருக்கும் என, வானிலை ஆய்வாளர்கள் கணித்து கூறுகின்றனர்.