RETamil Newsஇந்தியாதமிழ்நாடு

நிர்மலா தேவியின் ஜாமீன் மனு,தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேசியது பெரும் அதிச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து கடந்த மாதம் 16-ந் தேதி நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

நிர்மலா தேவி அளித்த தகவலின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகனை போலீசார் கைது செய்தனர். வழக்கில் தேடப்பட்டு வந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். இருவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

முக்கிய குற்றவாளியான நிர்மலா தேவியையும் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் நிர்மலாதேவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி விருதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட் (எண்2) உத்தரவிட்டுள்ளது.

நிர்மலா தேவியின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு இன்று விருதுநகர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்.2) விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருக்கு ஜாமீன் கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முன்னதாக கருப்பசாமியின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணை 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close