பதவியேற்ற மறுநாளே பெரும்பான்மையை நிரூபிப்பேன் : குமாரசாமி திட்டவட்டம்!!
முதலமைச்சராக பதவியேற்ற மறுநாளே கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிறுவிப்பேன் என குமாரசாமி கூறியுள்ளார். கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ள குமாரசாமி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தாம் மே 23ம் தேதி பதவியேற்க உள்ளதாகவும் முதல்வராக பதவியேற்ற மறுநாள் மே 24ம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார்.
இதனிடையே முதலமைச்சராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று குமாரசாமி உறுதிப்பட தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க நாளை டெல்லி செல்ல உள்ளதாகவும் கூறினார்.முன்னதாக கர்நாடக முதலமைச்சராக பதவியேற்று 55 மணி நேரத்தில் எடியூரப்பா பதவி விலகியதை அடுத்து ஆளுநர் வஜூபாய் வாலாவை குமாரசாமி சந்தித்தார். பின்னர் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் பதவியேற்க ஆளுநர் தன்னை அழைத்துள்ளதாகவும் பெரும்பான்மை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
நாளை பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், நாளை ராஜீவ் காந்தியின் நினைவு தினம் என்பதால் 23 -ம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என குமாரசாமி அறிவித்தார்.வரும் புதன்கிழமை பகல் 12 முதல் 2 மணிக்குள் கண்டிரவா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று தெரிவித்த அவர், பதவியேற்பு விழாவில் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ், மாயாவதி பங்கேற்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.மேலும் சாமி தரிசனம் செய்வதற்காக, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு செல்ல இருப்பதாகவும் அவர் கூறினார்.