இந்தியாவின் பாதுகாப்பு ரத்தக் குளியல் நடத்துகிறது : சிவசேனா கடும் கண்டனம்
மும்பை;
காஷ்மீரில் நடக்கும் தாக்குதல்களுக்கு சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீப காலங்களாக காஷ்மீர் மாநிலத்தில் தீவிர வாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. காஷ்மீர் மாநில பத்திரிகையாளரான ஷுஜாத் புகாரி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் நாட்டையே உலுக்கி உள்ளது.
இது குறித்து சிவசேனாவின் குரல் என சொல்லப்படும் மராட்டி மொழி தினசரி சாம்னா தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த தலையங்கத்தில் காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் தாக்குதல்கள் நமது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை மீது நடக்கும் தாக்குதல்கள் ஆகும்.
பிரதமர் வெளிநாட்டு கொள்கைகளை மேம்படுத்த பல பயணங்களை மேற்கொண்டுள்ளார். ஆனால் அதே சமயம் நமது நாட்டின் பாதுகாப்பு இந்த தாக்குதல்களால் ரத்தக் குளியல் நடத்துகிறது.
பிரதமர் எப்பொதும் வெளிநாட்டுப் பயணத்தில் தான் இருக்கிறார், பாதுகாப்பு அமைச்சருக்கு கட்சிப் பணிகள் நிறைய உள்ளது. உள்துறை அமைச்சரும் இங்கே இருப்பதே இல்லை. பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டின் மரியாதை உயர்வதாக பாஜக பெருமை அடித்துக் கொள்கிறது. ஆனால் ஐநா சபை காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாக கூறியது பிரதமருக்கு பெரும் தலை குனிவும் அவமானமும் ஆகும்.
நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பும் அபாயகரமாக உள்ளது. ரம்ஜான் பண்டிகை சமயத்திலும் தீவிரவாதிகள் நம்மை தாக்குகிறார்கள் என்றால் அரசின் மீது அச்சம் சிறிதும் இல்லை என்பது புலனாகிறது.
இந்த தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் தலையீடு மட்டும் இல்லை, பாஜகவின் கையாலாகாத தனமும் மறைந்துள்ளது என்பது ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை.
ராணுவ வீரர் ஔரங்கசீப் மற்றும் பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரி ஆகியோரின் மரணத்துக்கு பாஜக அரசு தான் முழுப் பொறுப்பாகும். என சாம்னா பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.