காவிரி மேலாண்மை ஆணையம்: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் தலைவர்கள் வலியுறுத்தல்!!
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தற்போது அளித்துள்ள தீர்ப்பையாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கூறியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் கூறியதாவது :
காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜூன் 1-ஆம் தேதிக்குள் அமைத்து, தமிழகத்துக்குரிய தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முழுமையான சுதந்திரமான தன்னாட்சி அதிகாரம் இல்லாத ஒரு ஆணையத்தையாவது அமைக்க மத்திய பாஜக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழகமும் கொடுத்த அழுத்தத்துடன், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு காட்டிய உறுதியான அணுகுமுறையும் தான் காரணம். இப்போதாவது ஜூன் 1-ஆம் தேதி வரை காத்திராமல், ஒரு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களையும், காவிரி ஒழுங்குமுறை நீராற்றுக் குழுவுக்கு உறுப்பினர்களையும் நியமிக்க வேண்டும். நீர்ப்பாசனத்துக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை அதிமுக அரசு திறக்க வேண்டும் என ஸ்டாலின் கூறினார் .
விஜயகாந்த் கூறியதாவது :
பல ஆண்டு காலமாக நீடித்து வந்த காவிரி பிரச்னை, காவிரி மேலாண்மை ஆணையம் அமைய உள்ளதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்ல தீர்ப்பு. பருவ காலத்துக்கு முன்னதாக காவிரி வரைவுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது எனத் அறிவித்துள்ளார்.
அன்புமணி (பாமக) கூறியதாவது :
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு தயாரித்த வரைவுச் செயல்திட்டத்தை ஏற்றுக் கொள்வதாகவும், அந்தத் திட்டத்தை நடப்பு பருவத்திலேயே செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை நிர்வகிக்கும் அதிகாரமற்ற ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்காது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்துடன் கூடிய காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்று அன்புமணி கூறினார் .
பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய முன்னணி கூறியதாவது:
கடந்த 50 ஆண்டு காலமாக தமிழகம் நடத்திய போராட்டத்தின் விளைவாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய கடமை கர்நாடகத்துக்கும், அதைக் கண்காணிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கும் உண்டு. நமக்கு வழங்கப்படவேண்டிய நீர் அளவு ஓரளவு குறைக்கப்பட்டிருந்தாலும் இந்தத் தீர்ப்பாவது நிறைவேற்றப்படவேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று பழ.நெடுமாறன் கூறினார்.