10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு: தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி
Udhayanithi stalin tweets

சென்னை:
10ம் வகுப்பு தேர்வை 15 நாட்களுக்கு தள்ளிவைத்த அரசுக்கு நன்றி என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டன. பிறகு அடுத்த மாதம் ஜூன் முதல் தேதியிலிருந்து பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 4ம் கட்ட ஊரடங்கு மே 31 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த நாளே தேர்வுகள் தொடங்குவதால், அதை தள்ளி வைக்க வேண்டும் என்று பல கட்சிகளும் கூறி வந்தனர்.
இந்நிலையில் இன்று முதலைமைச்சருடன் ஆலோசித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வுகளை ஒத்தி வைத்து புதிய தேர்வு அட்டவணையை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், 10ம் வகுப்பு தேர்வை 15 நாட்களுக்கு தள்ளிவைத்த அரசுக்கு நன்றி. ஆனால் தனிமனித விலகலுடன் கூடிய சுகாதாரமான வாகனம், வகுப்பறை உள்ளிட்ட கொரோனா பரவலுக்கு எதிரான பெற்றோர்-ஆசிரியர்-மாணவர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்பட்டால்தான் அரசின் நடவடிக்கை முழுமையடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.















