பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்தும் -பிரசாத லட்டுகள் பிளாஸ்டிக் பைகளில் விற்பனை !

ராமேசுவரம் தீவை சுற்றிலும் மன்னர் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பிரதந்தியத்தில் பவளப்பாறைகள் அதிகம். இத்தகைய பவளப்பாறைகள் பல்வேறு அறிய வகை உயிரினங்கள் உயிர் வாழ வாழ்விடமாக உள்ளது. இந்த அரியவகை உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டில் அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த ஹரிஹரனால் பிளாஸ்டிக் பை மற்றும் கப்புகள் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து ராமேஸ்வரம் , பாம்பன் , தங்கசிமிடத்தில் இருக்கும் கடைகள் மற்றும் தேனீர் விடுதிகள் ஆகிய இடங்களில் அதிகாரிகள் அவ்வப்போது சோதனையிட்டு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அதை பயன்படுத்திய வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.
அதனால் ராமேஸ்வர தீவில் உள்ள உள்ளூர் மக்கள் மலிவுவிலை துணிப்பைகளை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். எனினும் ராமேசுவரதிற்கு வரும் சுற்றுலா பயணிகளும் , பக்தர்களும் பிளாஸ்டிக் பைகளை கொண்டுவருவதை கட்டுப்படுத்த முடியவில்லை.
மேலும் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நேற்று அமலுக்கு வந்துள்ளது.அரசின் இந்த முடிவை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் விற்பனை செய்யப்படும் பிரசாத லட்டுகள் செவ்வாய்க்கிழமையும் பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படுவதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை பற்றி ராமேஸ்வரம் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ அரசின் முடிவை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பல்வேறு குழுக்களை அமைத்துஉள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் ஒரு வருவாய் அலுவலர், காவல்துறை அதிகாரி, உள்ளாட்சித்துறை அதிகாரி போன்றோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த குழுக்கள் நேரடியாக சென்று தடைவிதிக்கப்ட்ட தேதிக்கு பின் யார் ,யார் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்று கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ‘ என்று கூறினார்.















