மோடி அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அனுமதி
மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்க்கு அனுமதிப்பதாக மக்களவையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விஷயத்தில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீசை தெலுங்கு தேசம் கட்சி நேற்றே சபாநாயகர் அலுவலகத்தில் தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. 17 எதிர்கட்சிகளில் 12 கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் இந்த தீர்மா னத்துக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு இருந்தனர். இதை உடனே விவாதத்திற்க்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெலுங்குதேச கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
கேரளாவில் சசிதரூர் அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தை காங்கிரஸ் உறுப்பினர்கள் கிளப்பினர். இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
இதனிடையே மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், பெண்கள் பாதுகாப்பு, ஜம்முகாஷ்மீரில் ஆட்சி மாற்றம், அப்பாவிகள் படுகொலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. எனவே இந்த கூட்டத் தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்துவதில் நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம் என்றார்.