மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலின் புதிய திட்டம்; ரயில்வே தண்டவாளத்தில் யானைகள் உயிர் இழப்பதை தடுக்க ‘பிளான் பி ‘ திட்டம் அமல்.
ரயில்வே தண்டவாளங்களை யானைகள் கடக்கும் போது ரயிலில் மாட்டி யானைகள் உயிர் இழப்பது தொடர் கதையாகியுள்ளது. இவ்வாறு யானைகள் உயிரிழப்பதை தடுக்க மத்திய ரயில்வே அமைச்சரகம் ‘பிளான் பி ‘ என்ற புதிய நவீன திட்டத்தை அமல்படுத்த போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வனம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் யானை கூட்டங்கள் தங்களுக்கு தேவையான நீர் மற்றும் உணவிற்க்காக அப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ரயில் தண்டவாளங்களை கடந்து செல்லும் நிலையுள்ளது . அவ்வாறு ரயில் தண்டவாளங்களை கடந்து செல்லும் போது ரயிலில் மோதி யானைகள் உயிரிழக்க நேரிடுகின்றது. அதனால் விலங்கியல் ஆர்வலர்களும் மற்றும் பல்வேறு தரப்பினரும் கவலைப்படுகின்றனர்.
இந்நிலையில் ரயில்வே தண்டவாளங்களை யானைகள் கடக்கும் போது அவை ரயிலில் மோதி அடிபட்டு உயிரிழப்பதை தடுக்கும் வகையில் ரயில்வே துறை ‘பிளான் பி ‘ என்ற திட்டத்தை அமல்படுத்தப்போவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த ‘பிளான் பி ‘ என்ற திட்டம் என்னவென்றால் யானைகளுக்கு தேனீ என்றால் பயம் எனவே தேனீக்களின் சத்தம் கேட்டதும் அவை அலறியடித்து ஓடும் என்று விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் தான் இந்த ‘பிளான் பி ‘ என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வழிமுறையை தொழில்நுட்ப ரிதியாக பயன்படுத்தும் வகையில் , வனம் மற்றும் மலை பகுதிகளில் உள்ள ரயில் தண்டவாளங்களை ரயில் கடக்கும் போது , தேனீக்களின் சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை தண்டவாளத்தின் அருகே இணைக்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளனர்.
இதனால் யானைகள் தண்டவாளத்தை கடக்கும் போது அங்கு ரயில் வந்தால் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் தேனீக்களின் சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கி ஓசையை கேட்டதும் யானைகள் தண்டவாளம் அருகே வராமல்
வேறு திசையில் செல்லும் இதனால் யானைகள் உயிரிழப்பதை தடுக்க முடியும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.