
பனாஜி: மக்கள் வரிப்பணத்தில் அதிக முறை வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்பதால், அவரது பெயரை பரிந்துரைத்து கின்னஸ் சாதனை நிறுவனத்திற்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது. பிரதமராக மோடி பதவியேற்றார்.
இவர் பிரதமராக பதவியேற்ற 4 ஆண்டுகளில் 41 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்து 52 நாடுகளை சுற்றி வந்துள்ளார்.
இவரது வெளிநாட்டு பயணச்செலவு ரூ.355 கோடி என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சங்கல்ப் அமோன்கர், தனது கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை செய்தியாளர்களுக்கு காண்பித்தார்.
அதில் அதிகமுறை வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்பதால், கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு அவரது பெயரை பரிந்துரைத்து காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
பின்னர் சங்கல்ப் அமோன்கர் கூறுகையில், பிரதமர் மோடி மக்கள் வரிப்பணத்தில் அதிக வெளி நாடுகளுக்கு சென்றவர் என்பதை வலியுறுத்தும் விதமாக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும்.
இதற்காக கின்னஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார்.