காலாவதியான பொருட்கள் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்ய்யப்பட்டது கண்டுபிடிப்பு!!
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் இயங்கி வருகிறது நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்.
இந்த அங்காடியில் கடந்த ஒருவார காலமாக 50% சலுகை விலையில் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இதை பார்த்துவிட்டு வாடிக்கையாளர் ஒருவர் பொருட்கள் வாங்க சென்றபோது அங்கு சலுகை விலையில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் தயாரிப்பு தேதியிலிருந்து காலாவதியாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்தக் காலாவதியான பொருட்களையே மக்களும் வாங்கிச் சென்றுள்ளனர். இதனைக் கண்ட குமார்(40) என்ற வாடிக்கையாளர் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு கொடுத்த புகாரின் பேரில் தாம்பரம், பல்லாவரம், குன்றத்தூர் ஆகிய இடங்களில் இருந்து வந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த சூப்பர் மார்கெட்டில் சோதனை நடத்தினர்.
சோதனையில் காலாவதியான பிஸ்கட், ஜூஸ் வகைகள், கூல் ட்ரிங்ஸ், பிரட், பண், சிப்ஸ் பாக்கெட் உள்ளிட்ட இரண்டு லட்சம் மதிப்புள்ள ஏராளமான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு சீல் வைத்ததோடு அந்நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.
இது போன்ற சூப்பர் மார்கெட்களை நம்பி பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் தயாரிப்பு தேதியையும், அதன் முடிவு தேதியையும் சரிபார்த்து வாங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
மேலும் அவ்வாறு விற்கும் நிறுவனங்கள் பற்றியும் தகவல் அளிக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.