கனமழை எதிரொலி…சென்னையில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாகவும், இதன் காரணமாக காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அவர் அறிவித்தார். மேலும் சென்னையில் பரவலாக மழை பெய்யும் என்று அவர் கூறியிருந்த நிலையில், இன்று பிற்பகல் முதலே சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழை வெளுத்து வாங்கியது.
நாளை கன மழை முதல் மிக கன மழை பெய்யும் என்பதால் சென்னையில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மிலாடி நபி பண்டிகையையொட்டி நாளை ஏற்கனவே அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் விடுமுறை விடாமல் வகுப்புகளை நடத்த திட்டமிட்டிருந்த தனியார் பள்ளிகளுக்கு கண்டிப்பாக நாளை விடுமுறை அளிக்க வேண்டும், என்பது இந்த உத்தரவின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.