இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை !
ரஷ்யாவுடன் ராணுவ தளவாடங்கள் (எஸ்-400 ஏவுகணைகளை) வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இந்தியா – ரஷ்யா இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகை தர உள்ளார். 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது ரூ36,000 கோடியில் ராணுவ தளவாடங்கள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வான்வழி பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் வாங்க இந்தியா, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா கையெழுத்திட்டால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ரஷ்யா, ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து ராணுவ தளவாடங்களை வாங்கும் நாடுகளுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனும் அமெரிக்காவின் சட்டதிருத்தத்தின் படி இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் மட்டுமே இந்த தடையை நீக்கக்கூடிய அதிகாரம் படைத்தவராக அச்சட்டம் தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் தடையை விலக்க அதிபர் டிரம்ப்பிடம் கோரிக்கை விடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது. திட்டமிட்டபடியே ரஷ்யாவுடன் ஏவுகணை ஒப்பந்தத்தை தொடர்வதற்கும் இந்தியா உறதியான நிலைப்பாடு எடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இந்திய செய்தியாளர்களின் கேள்விக்கு விளக்கம் அளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் , இந்தியாவுக்கு பொருளாதாரத் தடைகளில் இருந்து விலக்கு அளிக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். அமெரிக்காவின் நட்பு நாடுகள் ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கக்கூடாது என்றும், இந்தியா ஏவுகணை ஒப்பந்தத்தை கைவிடுவதுதான் நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.