அரசின் இஸ்லாமிய எதிர்ப்பால் பதவி விலகிய குஜராத் முன்னாள் நீதிபதி!!
அகமதாபாத்
குஜராத் மாநில அரசின் இஸ்லாமிய எதிர்ப்புக் கொள்கையால் தாம் பதவி விலகியதாக முன்னாள் குஜராத் நீதிமன்ற நீதிபதி ஹிமான்ஷு திரிவேதி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2002 ஆம் அண்டு கோத்ராவில் ஒரு ரெயில் பெட்டி எரிக்கப்பட்டது. அதற்கு பழி வாங்கும் விதமாக குஜராத் மாநிலத்தில் மாபெரும் கலவரம் நிகழ்ந்தது. ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். பல விதமான வன்முறைகள் அரங்கேறின. இதற்கு ஆளும் பாஜக ஆதரவு அளித்தது. பாஜக அமைச்சர்கள் பலரும் கலவரங்களை முன்னின்று நடத்தியது அனைவரும் அறிந்த ஒன்று .
அத்தகைய புகார்களை எழுப்பியவர்களில் பெண் சமூக ஆர்வலரான தீஸ்தா செதல்வாட் என்பவரும் ஒருவர் ஆவார். அவருடைய புகார்களின் அடிப்படையில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் அதற்கு குஜராத் மாநில காவல்துறையும் சிபிஐ யும் தடங்கல் செய்து வருவதாக தீஸ்தா கூறி உள்ளார். அதை ஒட்டி அவருடைய இல்லத்தை சோதனை இட்ட சிபிஐ அவர் தேச விரோத செயல்களை செய்வதாக சில கடிதங்களை குஜராத் உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ளது.
இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல ஆர்வலர்கள் தீஸ்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களில் குஜராத் மாநில முன்னாள் நீதிபதி ஹிமான்ஷு திரிவேதியும் ஒருவர் ஆவார். அவர் தனது முகநூல் பதிவில், “தீஸ்லா செதல்வாத் அவர்களுக்கு பாராட்டுக்கள். நான் உங்களையும் உங்கள் தைரியத்தையும், ஒளிவு மறைவில்லாத பேச்சுக்களையும் மிகவும் விரும்பி வருகிறேன்.
நான் அகமதாபாத் மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த போது என் சக நீதிபதி திருமதி ஜ்யோத்ஸ்னா யக்னிக் பாஜக தொண்டர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கினார். அதற்காக அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மிரட்டல்கள் இன்றும் தொடர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் தீரமான பெண்மணியாக இருந்த ஜ்யோதஸ்னா தற்போது பயத்துடன் வாழ்ந்து வருகிறார்.
இதற்கு முக்கிய காரணம் குஜராத் மாநிலத்தை ஆளும் பாஜக அரசின் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான போக்கே ஆகும். எங்களைப் போல் நீதிபதிகளுக்கு இஸ்லாமியர்களுக்கு எதிரான தீர்ப்பு வழங்க வேண்டும் என மாநில அரசு நேரடி உத்தரவு இடாமல் பலமுறை மறைமுகமாக வலியுறுத்தி உள்ளது. அவ்வாறு நடக்க நான் விரும்பாததால் எனது பதவியை நான் ராஜினாமா செய்தேன்” என பதிந்துள்ளார்.
ஆளும் பாஜக அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் அம்மாநில முன்னாள் நீதிபதியின் இந்த பதிவு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.