சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு!!!
தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று பரவலாக ஆங்காங்கே மழை பெய்ய பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
இன்றைய மழை வாய்ப்பு குறித்து தனது பேஸ்புக்கில் அவர் தெரிவித்து இருப்பதாவது , நேற்றைய நாளைப் போலவே வட தமிழக மாவட்டங்களுக்கு மழை பெய்ய நல்ல வாய்ப்பு உள்ள நாளாக இன்று அமைந்துள்ளது.
காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும், ஒரு வேளை அதிர்ஷ்டம் இருந்தால் சென்னை நகரிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. (காற்றால் கடத்தி கொண்டு வரப்படும் மேகக் கூட்டங்கள் நமக்கு சாதகமாக மாறினால் மட்டும்)
இந்த மழை பெய்யும் நகரங்களின் பட்டியலில் விழுப்புரம், நாமக்கல், புதுச்சேரி, கடலூரும் சேர்ந்துள்ளது.
நேற்றைய தினம் போலவே வட மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கிருஷ்ணகிரி, பெங்களூர், தருமபுரி ஆகிய பகுதிகளுடன் இன்று நாமக்கல், புதுவை மற்றும் கடலூரின் கடற்கரைப் பகுதிகள் இணைந்துள்ளன.
அதிர்ஷ்டம் இருந்தால் கரூர், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளிலும் மழை பெய்யும். மழை மேகங்கள் அப்பகுதியில் திரள அதிக வாய்ப்புகள் உள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று மேகக் கூட்டங்கள் அங்கு வலுவாக உள்ளன.
காஞ்சிபுரத்தில் நேற்று 50 மி.மீ. மழை பெய்தது. இன்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வெப்பநிலை நிச்சயம் குறையும். அதே சமயம், புழுக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த மாதம் முழுக்கவே புழுக்கமாக இருக்கும் என்று தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.