5வது நாளாக கெஜ்ரிவால் தர்ணா போராட்டம்;வலுக்கட்டாயமாக வெளியேற்ற மத்திய அரசு திட்டம்!!
புதுடில்லி: டில்லி கவர்னர் இல்லத்தில் 5வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தும் அமைச்சர்களை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
5வது நாள் டில்லியில், ‘ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நிறுத்த உத்தரவிட வேண்டும்.
நான்கு மாதங்களாக பணிக்கு வராதோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘
வீடுகளுக்கு நேரடியாக, ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் தர வேண்டும்’போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மாநில சுகாதாரத் துறை அமைச்சர், சத்யேந்தர் ஜெயின், உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.
அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிற அமைச்சர்கள், கவர்னர் மாளிகை அலுவலகத்தில் மூன்று நாட்களாக தங்கி, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த தர்ணா போராட்டம், 5வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற உள்ளதாக தெரிகிறது.
இதற்காக ஆம்புலன்ஸ்கள் கவர்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உண்ணாவிரத போராட்டத்தில் இருக்கும் அமைச்சர்களை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கெஜ்ரிவால், டுவிட்டரில் கூறியுள்ளதாவது:
அமைச்சர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற திட்டமிடுவது ஏன்? போராட்டம் துவங்கி 4 நாட்கள் தான் ஆகிறது. அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளனர்.
இதனிடையே, கவர்னர் அலுவலகத்தில் உள்ள தனது கணவர் கெஜ்ரிவாலை சந்திக்க அதிகாரிகள் அனுமதி மறுப்பதாக, அவரது மனைவி சுனிதா குற்றம்சாட்டியுள்ளார்.