கர்நாடக மாநில சட்டமன்றத்துக்கு இன்று நடைபெற்ற வாக்குப்பதிவைத் தொடர்ந்து முன்னணி ஊடகங்கள் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பெரும்பான்மையான கருத்து கணிப்புகள் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன.
முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட பாரதிய ஜனதா கர்நாடக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக விளங்கி வருகிறது.
இரண்டு கருத்துக்கணிப்புகளே காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளன. எனினும் அதில் ஒன்றில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி அமைக்க போதுமான இடங்களைப் பிடிக்கும் என்று கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
வெளியாகியுள்ள அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மூன்றாவது இடத்தையே பிடிக்கும் என்று கூறுகின்றன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் அட்டவணை.
செய்தி நிறுவனம் | காங்கிரஸ் | பாஜக | ஜனதா தளம் | பிற கட்சிகள் |
ஏபிபி நியூஸ் – சி வோட்டர் | 82 – 94 | 101 – 113 | 18 – 31 | 1 – 8 |
இந்தியா நியூஸ் – டுடே சாணக்யா | 62 – 84 | 109 – 131 | 19 – 33 | 0 – 6 |
டைம்ஸ் நவ்-விஎம்ஆர் | 90 – 103 | 80 – 93 | 31 – 39 | 2 – 4 |
ரிபப்ளிக் டிவி – ஜன் கி பாத் | 73 – 82 | 95 – 114 | 32 – 43 | 2 – 3 |
ஆஜ் தக் – ஏக்சிஸ் | 106 – 118 | 79 – 92 | 22 – 30 | 1 – 4 |
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு இன்று நடந்த வாக்குப்பதிவில் 70% வாக்குப்பதிவு நிகழ்ந்துள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.க வுக்கு இது முக்கியத் தேர்தலாகவே பார்க்கப்படுகிறது. கர்நாடகவில் இதுவரை ஒருமுறை மட்டுமே வெற்றிப் பெற்றுள்ள பா.ஜ.கவுக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்பார்ப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.