ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவு!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணைக் காலத்தை இரண்டாம் முறையாக 4 மாத காலத்துக்கு நீட்டித்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை கடந்த ஆண்டு செப். 24-ஆம் தேதி தமிழக அரசு அமைத்தது.
இதையடுத்து, நீதிபதி ஆறுமுகசாமி நவ. 22-இல் தனது விசாரணையைத் தொடங்கினார். முதலில் இரண்டு மாத காலமாக விசாரணை ஆணையத்தின் காலம் நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாகப் பலரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதால், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 24) வரை 6 மாத காலத்துக்கு விசாரணை ஆணையத்தின் காலத்தை நீட்டித்து கடந்த டிச. 24-இல் தமிழக அரசு உத்தரவிட்டது.
ஜெயலலிதாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள் என இதுவரை 30 -க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
சாட்சியம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேலும் பலரை விசாரிக்க வேண்டி இருப்பதால் ஜூன் 24 -இல் இருந்து மேலும் 6 மாத காலத்துக்கு விசாரணைக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என ஆணையம் சார்பில் தமிழக அரசுக்கு அண்மையில் கடிதம் எழுதப்பட்டது.
இந்நிலையில், விசாரணை ஆணையத்தின் காலத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவின் உறவினரும், ஜெயலலிதாவின் தனி மருத்துவருமான டாக்டர் சிவகுமார் விசாரணை ஆணையத்தில் இரண்டு முறை ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற விசாரணையின்போது, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பேசியதாகக் கூறப்படும் ஆடியோவை ஆணையத்திடம் ஒப்படைத்தார்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்க டாக்டர் சிவகுமார் திங்கள்கிழமை (ஜூன் 25), அப்பல்லோ டாக்டர் நளினி, செவிலியர் பிரேமா ஆண்டனி ஆகியோர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 26), மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்டெல்லா மேரீஸ் கிளையின் முன்னாள் மேலாளர் மகாலட்சுமி, அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீகோபால், சாந்தாராம், ராமச்சந்திரன் ஆகியோர் புதன்கிழமை (ஜூன் 27), துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, ஐஜி சத்யமூர்த்தி ஆகியோர் வியாழக்கிழமை (ஜூன் 28) ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது .