தி.மு.க. ஆட்சியில் இஸ்லாமியர்கள் சுதந்திரம் இல்லாமல் இருந்தனர்.;அமைச்சர் ஜெயக்குமார்.
சென்னை: தி.மு.க. ஆட்சியில் இஸ்லாமியர்கள் சுதந்திரம் இல்லாமல் இருந்தனர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மண்ணடியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சட்டம் ஒழுங்கு குறித்து திமுக விமர்சிப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் , சட்டம் ஒழுங்கு குறித்து திமுக பேசக்கூடாது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.
சென்னை சென்ட்ரல் ஜெயிலில் ஜெயிலர் எரித்து கொல்லப்பட்டது, சென்னை சட்டக்கல்லூரி மோதல், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மண்டை உடைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமைச்சர் முன்னிலையில் கொல்லப்பட்டது, இவை எல்லாம் திமுக ஆட்சியில்தான் நடைப்பெற்றது .
தற்போது தமிழகம் அமைதி பூங்காவாக செயல்படுகிறது. திமுக ஆட்சியில் காவல்துறை செயல்பட முடியாத நிலையில் இருந்தது.
திமுக ஆட்சியில் டிசம்பர் 6 வரும்போதெல்லாம் இஸ்லாமியர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது.
சசிகலா திவாகரனுக்கு நோட்டிஸ் அனுப்பியது அவர்களின் குடும்ப பிரச்சனை, அவர்களின் குடும்ப பிரச்சனை குறித்து நான் பேச விரும்பவில்லை.
கூட்டணி குறித்து பேச இது நேரமில்லை. தேர்தல் சமயத்தில் கட்சி தலைமை இதுகுறித்து முடிவு செய்யும்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.