திருபோரூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!!
சென்னையை அடுத்த திருப்போரூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த மாணவி ஒருவர் மகாபலிபுரம் அருகே பையனூர் பகுதியில் இயங்கி வரும் விநாயகா மிஷன்ஸ் அறுபடை வீடு பொறியியல் கல்லூரியில், பையோ மெடிக்கல் முதலாம் ஆண்டு பயின்று வந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி, விடுதி வராண்டாவின் ஒரு பகுதியான திறந்தவெளி ஓய்வு அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து மாமல்லபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த மாணவிக்கு கடந்த இரண்டு வார காலமாக வயிற்று வலி இருந்ததாகக் கூறப்படுகிறது.
கல்லூரி விடுதியின் திறந்தவெளி ஓய்வு அறையில் உள்ள மின்விசிறியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.
மாணவின் தற்கொலை மற்ற மாணவிகளிடையே பெரும் பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.