மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடுங்கள்..! மோடிக்கு லெட்டர் போட்ட எடப்பாடி..!
Chief minister edapaddi palanisamy writes letter to PM Modi

சென்னை: மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடுமாறு பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசானது மின்சார சட்ட திருத்த மசோதாவை கொண்டுவந்து, மாநிலங்களின் கருத்தை அறிய அனுப்பியுள்ளது. மசோதாவில், மாநில மின்சார வாரியங்களை பிரித்து, வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
இந் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
வீட்டு உபயோக நுகர்வோரையும், விவசாயிகளையும் பாதிக்கும் என்பதால் மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடவேண்டும். புதிய திருத்தங்கள் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பதாகவும் அமைந்திருக்கிறது.
விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்குவது மாநில அரசின் உரிமை சார்ந்தது. எனவே அதை மாநிலங்களிடமே விட வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளில் மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. ஆகையால் மின்சார சட்டத் திருத்தம் மீது ஆலோசிக்க அவகாசம் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.















