fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

இந்தியா தாக்கினால் நாங்கள் பதிலடி கொடுப்போம் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை!

பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான், “இந்தியா எங்களைத் தாக்கினால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கம் இந்தியாவில் கொடூரமான தாக்குதல்களை வரிசையாக முன்னெடுக்கிறது. இதனால் இந்திய அரசு, பாகிஸ்தான் மீது மிகவும் கோபத்தில் உள்ளது. இந்திய தரப்பு, பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சர்வதேச நாடுகளை வலியுறுத்தி வருகிறது.

இப்படிப்பட்ட பதற்றம் நிறைந்த சூழலில் இன்று பேசிய இம்ரான் கான், ‘புல்வாமா தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதை காரணமாக வைத்து பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.

பாகிஸ்தான் கடந்த 15 ஆண்டுகளாக பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டு வருகிறது. இதில் நாங்கள் 70 ஆயிரம் பேரை இழந்திருக்கிறோம். நாங்கள் அமைதியை நோக்கி நகரும் வேளையில் நாங்கள் ஏன் இப்படிச் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது?

காஷ்மீர் சர்ச்சையை பொருத்தவரையில் தீர்வை நோக்கி நகர, ஒரு பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு பதிலாக இந்தியா தேவையின்றி எங்கள் மீது பழி சுமத்துகிறது. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது நாங்கள்தான். கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேரை இழந்திருக்கிறோம். பயங்கரவாதத்துக்கு சுமார் 100 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான செல்வத்தை இழந்திருக்கிறோம்.

இப்போது பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இந்திய தரப்பு சொல்லி வருவதெல்லாம் தேர்தலை மனதில் வைத்துத்தான். அதே நேரத்தில், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் திருப்பியடிக்க யோசிக்காது. கண்டிப்பாக அடிக்கும் என்று எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார்.

புல்வாமா தாக்குதல் நடந்தபிறகு முதல்முறையாக அது தொடர்பாக பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியான பிடிவியில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அதிகாரபூர்வ கருத்து தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close