fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

தற்கொலைப்படை தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் !

காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள சவலாப்பேரி கிராமம், மேலத்தெருவை சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன்(30) வீரமரணம் அடைந்தார். மாலை 6.15 மணியளவில் 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் சுப்பிரமணியனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சுப்பிரமணியன் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தாருடன் மகிழ்ச்சியோடு நேரத்தை கழித்தார். பின் அவர் 10-ந் தேதி காலையில் மீண்டும் பணிக்கு புறப்பட்டு சென்றார். ஒரு ஆண்டுக்கு முன்னர் தான் சுப்பிரமணியனுக்கும், கிருஷ்ணவேணி(23) க்கும் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் பயங்கரவாதி நடத்திய திடீர் தாக்குதலில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் சவலாப்பேரி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

சுப்ரமணியனின் உடல், டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

சுப்பிரமணியனின் உடல், அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர், உறவினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அங்கு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீரரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு அரசு வழங்கும் 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர் வீரமரணம் அடைந்த சுப்பிரமணியன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி நியமன உத்தரவை வழங்கினார்.

21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் சுப்பிரமணியனின் உடல் மாலை 6.15 மணியளவில் விளைநிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close