வேறு வழியே இல்லை!!கபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு!!
வேறு வழியே இல்லாமல் கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஆறு தினங்களைக கனமழை பெய்து வருகிறது. மடிகேரி, குடகு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக கர்நாடகத்தின் கபினி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 37 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையின் மொத்த உயரமான 84 அடியில் நீர்மட்டம் 80 அடியை தாண்டியுள்ளது. தனது முழுகொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 4 அடியே உள்ளது.
இந்நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி நீர்திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (ஜூன் 14) மாலை விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுவிற்கு நாளை இரவுக்குள் வந்தடையும் என கணிக்கப்படுகிறது.
கர்நாடகத்தில் கனமழை பரவலாக தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பி அங்கிருந்தும் காவிரியில் தண்ணீர் திறக்கப்படும். அப்படி திறக்கப்பட்டால் காவிரியில் தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைத்துவிடும் என கூறப்படுகிறது.
மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 39.96 அடி. அணைக்கு 743 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.