2 லட்சம் முன்பணம் கேட்ட ஸ்ரீமதி சுந்தரவல்லி மெமோரியல் பள்ளி – பெற்றோர்கள் முற்றுகை
சென்னை பெருங்களத்தூர் மற்றும் குரோம்பேட்டையில் இயங்கி வரும் ஸ்ரீமதி சுந்தரவல்லி மெமோரியல் பள்ளி நிர்வாகம் மாணவர்களிடம் ரூ.2 லட்சம் முன்பணம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இன்று 2 பள்ளிகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சென்னை புதுப்பெருங்களத்தூர் மற்றும் குரோம்பேட்டையில் ஸ்ரீமதி சுந்தரவல்லி மெமோரியல் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த இரு பள்ளிகளிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்துடன் செயல்பட்டு வரும் இந்த பள்ளி இந்த ஆண்டு அரசு நிர்ணயித்த கட்டணத்தை தவிர மாணவர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.2 லட்சம் முன்பணம் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
இதை கேள்விப்பட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இன்று காலை பெருங்களத்தூர் மற்றும் குரோம்பேட்டை பள்ளி வளாகத்தை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
உள்ளே சென்ற அவர்கள் அங்கு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பள்ளி நிர்வாகத்தை வெளியே வருமாறு அழைத்தனர்.
தகவலறிந்த துணை கமிஷனர் முத்துசாமி, சிட்லபாக்கம் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சேலையூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் பள்ளிக்கு விரைந்தனர். பெற்றோர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் செங்கல்பட்டு பள்ளி கல்வி இயக்குனர் தாமோதரனும் சம்பவ இடத்திற்கு வந்தார்.
அவரிடம் பள்ளி நிர்வாகம் ரூ.2 லட்சம் முன்பணம் கேட்டது குறித்து புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து பெற்றோர்களில் இருந்து 10 பேர் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இருப்பினும் இதை ஏற்க பெற்றோர்கள் மறுத்துவிட்டனர்.
ரூ.2 லட்சம் முன்பணம் கேட்டது குறித்து அண்ணாநகரில் உள்ள சிபிஎஸ்இ இயக்குனர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
பெற்றோர்களின் திடீர் போராட்டம் காரணமாக இந்த 2 பள்ளி வளாகமும் இன்று பரபரப்பாக காணப்பட்டது.
பாதுகாப்பிற்காக போலீசாரும் பெருமளவில் நிறுத்தப்பட்டனர்.