ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைக்க வேண்டும்… பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு !
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. அப்போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் 13 பேர் உயிர் இழந்தனர். இந்த கலவரத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அந்த ஆலைக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து ஸ்டர்லைட் நிர்வாகம், ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அவர்கள் தொடரப்பட்ட வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. விசாரணையின்போது ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என தமிழக அரசு வாதிட்டது. இதனை நிராகரித்தது பசுமை தீர்ப்பாயம்.
ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ளலாம் என ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. ஆனால், அதேவேளையில், ஆலை இயக்க அனுமதியில்லை எனவும் உத்தரவு பிறப்பித்தது. ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசு தொடர்பான அறிவியல் பூர்வமான ஆதாரங்களை ஆகஸ்ட் 20-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று ஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்த அறிவியல்பூர்வ ஆதாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சமர்பித்தது.
ஸ்டெர்லைட் அலையை ஆய்வு செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படவேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. இந்த குழுவில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுசூழல் விவகார துறை அமைச்சக அதிகாரிகள் இடம் பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆறு வாரங்களில் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கலாமா, வேண்டாமா என்பது பற்றி குழு முடிவெடுக்கலாம்.
இதற்கு ஸ்டெர்லைட் வேதாந்த நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கக்கூடாது எனவும், வேறு மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டுமெனவும் ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் தெரிவித்தார்.