விருதுநகரில் ரூ.36.33 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல்
விருதுநகரில் புழக்கத்தில் விட முயன்ற 36 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்துள்ள போலீசார், 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 4-ம் தேதி இரவு விருதுநகர் கடை தெரு அருகே உள்ள துணிக்கடை ஒன்றில், கோபிநாத் என்பவர் 2000 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்றிருக்கிறார். ஆனால் சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் கோபிநாத் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அவர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 5 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகரில் கலர் பிரிண்டிங் மூலம் இந்த நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட முயற்சித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணியில் மேலும் தொடர்புடையவர்களைப் பற்றி பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கள்ளநோட்டுகள் அச்சடிப்பதற்கான உபகரணங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதில் தொடர்புடைய 6 பேரை கைது செய்துள்ள போலீசார், புழக்கத்தில் விடுவதற்காக கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த 2000 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.
ஒரே நேரத்தில் 36 லட்சம் ரூபாய்க்கான கள்ள நோட்டுக்கள் சிக்கியிருப்பது போலீசாரை மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.