
கொல்கத்தா: மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மருத்துவமனையில் இன்று (திங்கட்கிழமை) காலை காலமானார். அவருக்கு வயது 89.
லோக்சபா முன்னாள் சபா நாயக்கர் சோம்நாத் சாட்டர்ஜி சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக கடந்த 40 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை நல்ல முறையில் தேறி வந்த நிலையில் அவருக்கு பக்கவாதமும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திடீரென அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இவரது உடல்நிலை மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்க பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார்.
முன்னாள் சபாநாயகர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்:
சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா , திமுக எம்.பி திருச்சி சிவா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்:
“சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு நாட்டுக்கு பேரிழப்பு”என குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“இந்திய அரசியலில் சிறந்து விளங்கியவர் சோம்நாத் சாட்டர்ஜி” என பிரதமர் மோடி அவர்கள் புகழாரம்.
10 முறை நாடாளுமன்ற எம்.பி யாக இருந்த பெருமை சோம்நாத் சாட்டர்ஜி அவரையே சாரும். 2008-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவை வாபஸ் பெற்ற பிறகும், சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்யவில்லை. எனவே அக்கட்சியை விட்டு அவர் விலக்கி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.