ரயில்வே நிலையங்களில் விற்கப்படும் டீ, காபி விலையை உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு !
ரயில் மற்றும் ரயில்வே நிலையங்களில் விற்கப்படும் தேநீர், காபி ஆகியவற்றின் விலையை உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ரயில்வே உணவு ஒப்பந்த நிறுவனம் ஐஆர்சிடிசி இந்த விலை உயர்வு திட்டத்தை ரயில்வே நிர்வாகத்திடம் முன்வைத்தது. அந்த முன்மொழிவுக்கு ரயில்வே துறை ஒப்புதல் வழங்கியது.
இதன்படி, 150 மில்லி அளவு கொண்ட டீ பேக் கொண்ட தேநீரும், 170 மில்லி அளவு கொண்ட காபியும் 7 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது. அதேசமயம், ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள ரெடிமேட் தேநீர் வழக்கம் போல் ரூ.5 விலையில் தொடர்ந்து விற்பனையாகும் எனக் கடந்த 18-ம் தேதி ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றத்திற்கு ஏற்ப உரிமத் தொகையை உயர்த்துமாறு அனைத்து மண்டலங்களையும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சுமார் 350 ரயில்களில் ஐஆர்சிடிசி உணவகம் உள்ளது. அந்த ரயில்கள் அனைத்திலும் உணவுப் பொருட்களின் விலை மாற்றப்பட உள்ளது. ராஜஸ்தானி மற்றும் சதாப்தி விரைவு ரயில்களில் உணவுக்கு முன்கூட்டியே பணம் வசூலிக்கப்படுவதால் இந்த ரயில்களில் விலை மாற்றம் இருக்காது.