கடந்த சில வாரங்களாக பெய்துவரும் கனமழையால் கேரளாவின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 142 அடியாக இருந்து வருகிறது.இதனை தொடர்ந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். இந்த கோரிக்கையை நிராகரித்து பதில் கடிதம் எழுதப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணை, கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியில் இருக்கிறது. இதன் காரணமாக கேரள மக்களின் பாதுகாப்பு கருதி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டுமென உத்தரவிட கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், முல்லைப் பெரியாறு அணையின் நீரோட்ட பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து அச்சத்துடனேயே இருக்கக்கூடாது என்றும், எனவே அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் கூறினார்கள்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைப்பது பற்றி அணையின் துணை கண்காணிப்பு குழு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டுமென உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைப்பது பற்றி இவ்விரு குழுக்கள் ஆலோசித்து எடுக்கும் முடிவினை தமிழக அரசு மதிக்க வேண்டும் என கூறியுள்ளது.