மாநிலங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பே இல்லை-ஓ.பி. ராவத் அறிக்கை!
மாநிலங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக அரசு வலியுறுத்தி வருகிறது.
பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது குறித்து சட்ட ஆணையத் தலைவர் நீதிபதி பி.எஸ். சவுகானுக்கு சமீபத்தில் 8 பக்கம் அடங்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதுபோன்ற தேர்தல்கள் குறித்து நாங்கள் கூறுவது வெறும் கருத்து மட்டுமல்ல, கடந்த காலங்களிலும் இதுபோன்ற தேர்தல் நடந்துள்ளது என்றும், அவற்றை நடத்துவதால் செலவு குறையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அவுரங்காபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராவத், சட்டரீதியான ஏற்பாடு இல்லாமல், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடக்க உள்ள 8 மாநில தேர்தல்களில், வாக்காளர்களுக்கு வாக்களித்ததற்கான ரசீது வழங்கும் வசதியோடு கூடிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக ராவத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த ராவத், தேவை ஏற்பட்டால் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு, ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கான தேர்தலையும் ஒன்றாக நடத்தலாம் எனத் தெரிவித்திருந்தார்.