பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பிராங்கோ மூலக்கலுக்கு திடீரென நெஞ்சுவலி-மருத்துவமனையில் அனுமதி
கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பேராயர் பிராங்கோ மூலக்கல் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் இவர் பாதிரியராக இருந்த போது கன்னியாஸ்திரி ஒருவரை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைக்காக மூலக்கல் திருப்புனித்துராவில் உள்ள கேரள குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பேராயர் பிராங்கோ மூலக்கல் ஆஜரானார். கடந்த இரண்டு நாட்களில் 15 மணிநேரம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் பேராயர் அளித்த தகவல்களின் பேரில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினர். 3-வது நாளாக நேற்றும் நீடித்த விசாரணையின் இறுதியில் பேராயர் பிராங்கோ மூலக்கலை காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது.
கோட்டயம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லும் வழியில் பிராங்கோ மூலக்கல் தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக போலீசாரிம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, எட்டுமானூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை போலீசார் அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஈ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.