நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்படும்- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.
ஈரோடு மாவட்டம் பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு இன்று காலை நேரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, வேட்டி, சேலைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அமைச்சர்கள் செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
பின்னர், பவானி ஆறு பாயும் பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பவானி சந்தைப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீரில் இறங்கி ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.
அதன்பின்னர், பவானி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஆய்வு நடத்திய அவர், அங்கு ஒரு பெண் குழந்தைக்கு நந்தினி என பெயர் சூட்டினார். அதேபோல், மற்றொரு குழந்தைக்கும் பெயர் சூட்டிய முதலமைச்சர், பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்த பின்னர் ஈரோடு மாவட்டம் பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரையோர மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும் எனத் தெரிவித்தார்.
ஈரோட்டில் ஆய்வை முடித்துவிட்டு, நாமக்கல் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குமாரபாளையத்தில் அரசு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது, அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி ஆகியோரும் உடனிருந்தனர்.