தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த பினராயி விஜயன் !!!
கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத கன மழையினால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமான உயிர் சேதம் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டது. பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதிலிருந்து மக்களை மீட்டு அம்மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர நிதியுதவி அளிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற தொகையை நேரடியாக அனுப்பிவைக்குமாறு நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அனைத்து திரைத்துறையினிடமும் வேண்டுகோள் வைத்தார்.
நடிகர் சங்கம் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது. பின்னர், நடிகர் நடிகைகள் மற்றும் திரைத்துறையினர் அனைவரும் பெரும் தொகைகள் நிதியுதவியாக அளித்து வந்தனர். நடிகர் சங்கத்தின் ஒத்துழைப்புக்கு பாராட்டும் நன்றியும் சொல்லி, கேரள முதல்வர் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “தென்னிந்திய நடிகர் சங்கம் சரியான நேரத்தில் அளித்துள்ள நிதி மிகப்பெரும் உதவியாக இருக்கிறது. உங்களுடைய பங்களிப்புக்கு நன்றி”என்று கூறப்பட்டுள்ளது.