சபரிமலை கோவிலில் நடந்த வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம் – கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலில் நடந்த வன்முறைக்கு முழுக்க ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். சபரிமலை கோவிலுக்கு சென்ற 10 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண் பக்தர்களை அரசோ, போலீசாரோ தடுக்கவில்லை.
வெள்ள நிவாரண நிதி திரட்ட வளைகுடா நாடுகளுக்கு சென்று இருந்த முதல்வர் பினராயி விஜயன் கேரளா திரும்பியுள்ளார். இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்த தீர்ப்பை கேரள மாநில அரசு நடைமுறைப்படுத்தும் என்றே சுப்ரீம் கோர்ட்டில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்கு செல்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து இருந்தது. அங்கு சென்ற பக்தர்களை அரசோ, போலீசாரோ தடுக்கவில்லை.
சபரிமலை பகுதியில் போராட்டத்தை தூண்டி, போர்க்களமாக மாற்ற ஆர்.எஸ்.எஸ்., தான் முயற்சி செய்தது. போராட்டகாரர்கள் வாகனங்களை வழி மறித்தனர். பெண் பக்தர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை தாக்கினர். பத்திரிகையாளர்கள் மீது இதுபோன்ற அணுகுமுறை காட்டப்பட்டது கேரள சரித்திரத்தில் இதுவே முதல் முறை. இவ்வாறு அவர் கூறினார்.